
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த கல்லூரி மாணவர்கள் மீது நேற்று காலை போலீசார் தடியடி நடத்தினர். இதனால், மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது.. பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டம், சாலை மறியல் நடந்தது.
இதையொட்டி சென்ன்னை ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தை மர்மநபர்கள் தீ வைத்து எரித்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் கலவரம் நடந்தது. போலீசார் தடியடி, கல்வீச்சு, கண்ணீர் புகை குண்டு வீச்சு ஆகியற்றில் ஈடுபட்டனர்.
அப்போது, சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த ஏராளமான வாகனங்களும், குடிசை வீடுகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி வரும் கல்லூரி மாணவர்களும், பொதுமக்கள் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், போலீசார் வாகனங்களுக்கு தீ வைத்து எரிப்பது, குடிசைகளுக்கு தீ வைப்பது, வீட்டின் வெளியே நிற்கும் பெண்களை,, லத்தியால் சரமாரியாக தாக்குவது போன்ற காட்சிகள், வாட்ஸ்அப் மூலம் வைரலாக பரவியது. இதனால், தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டது போலீசார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜ், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரே வாகனங்களுக்கு தீ வைக்கும் காட்சி வெளியான வீடியோ குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என செய்தியாளர்களிடம் கூறினார்