
வடபழனியில் வன்முறை…துப்பாக்கியால் சுட்டு போராட்டக்காரர்களை விரட்டியடித்த போலீஸ்…
வடபழனி அருகே போலீஸ் வேன் ஒன்றை வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்ததுடன் , பொதுமக்கள் மீது கல்வீசி தாக்கினார்கள். இதனால் காவல் துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அவர்களை விரட்டியடித்தனர்.
சென்னை மெரினாவில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து நகரின் பல இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோயம்பேட்டை அடுத்த வடபழனி 100 அடி சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எம்.எம்.டி.ஏ பஸ் நிறுத்தம் அருகே 200–க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். அவர்களை கலைந்து செல்லும்படி கூறிய போலீசாரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர் பதிலுக்கு போலீசாரும் திருப்பித் தாக்கினர்.இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் அங்கு நின்ற போலீஸ் வேன் ஒன்றுக்கு தீ வைத்தனர்..
மேலும் அந்த கும்பல் அங்கிருந்த கடைகளில் இருந்த குளிர்பான பாட்டில்களை சாலைகளில் போட்டு உடைத்தனர். போராட்டக்காரர்களின் இந்த வன்முறையால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது.
போராட்டக்காரர்கள் தொடர் வன்முறையில் ஈடுபட்டதால் தமிழக அரசு விரைவுப்படையை சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
விரைவுப்படை போலீசார் வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி வானத்தை நோக்கி 2 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டு எச்சரித்தனர். அதன்பின்பு வன்முறையில் ஈடுபட்ட கும்பல் அங்கு இருந்து தப்பி சென்றது.
அதனை தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டனர்.