ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் விசிகவில் இருந்து நீக்கம்!

By Manikanda Prabu  |  First Published Mar 5, 2024, 10:45 AM IST

போதைப்பொருள் வழக்கில் சிக்கியுள்ள ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
 


டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை, டெல்லி சிறப்பு காவல்துறை நடத்திய சோதனையில் 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மொத்த மதிப்பு ரூ. 2,000 கோடி எனவும் தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில், திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக், அவரது சகோதரரும், விசிகவை சேர்ந்தவருமான முகமது சலீம், நடிகர் மைதீன் ஆகியோர் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, ஜாபர் சாதிக், முகமது சலீம் ஆகியோர் தலைமறைவாகினர். அவர்களை பிடிக்க மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Latest Videos

undefined

ஸ்பெயின் பெண் பாலியல் வழக்கு: ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கிய ஜார்கண்ட் போலீஸ்!

இந்த நிலையில், போதைப்பொருள் வழக்கில் சிக்கியுள்ள ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விசிக ஒழுங்கு நடவடிக்கை குழு மாநில செயலாளர் தேவராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சென்னை மாவட்டம், மையசென்னை மண்டல துணைச் செயலாளர் திரு அ.முகமது சலீம், கட்சியின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டுவருவதால் இவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கப்படுகிறார். இவருடன் யாரும் கட்சி தொடர்பாக எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக். போதை பொருள் வழக்கில் சிக்கியதையடுத்து, அக்கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் என்பது  குறிப்பிடத்தக்கது.

click me!