
பெண்களை கேலி செய்து இழிவான செயல்களில் ஈடுபட்டு வரும் குடிகாரர்களை உருவாக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி துவரங்குறிச்சி அருகே புத்தாநத்தம் கடைவீதியில், குடியிருப்புப் பகுதிக்கு அருகிலும், வணிக நிறுவனங்களுக்கு அருகிலும் அரசு டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இக்கடையில் மது அருந்துவோரால் அப்பகுதியில் அடிக்கடி அடிதடி தகராறும், பெண்களை கிண்டல் செய்தும் வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் வசிப்பவருக்கும், பெண்களும், குழந்தைகளும், வணிக நிறுவன ஊழியர்களும் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, இக்கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியினர் கடந்த சில வாரங்களுக்கு முன் அக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், விரைவில் கடையை மூடுவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனாலும், இதுவரை கடை மூடப்படவில்லை. பிரச்சனையும் ஓய்ந்த பாடில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று குறிப்பிட்ட டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தை அறிவித்தனர். அறிவித்தபடி, மாவட்ட தலைவர் ஹசன் இமாம் தலைமையில் அக்கடை முன் திரண்ட எஸ்டிபிஐ கட்சியினர் கடைக்கு பூட்டு போட முயன்றனர்.
அப்போது அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த துவரங்குறிச்சி காவலாளர்கள் தடுத்து நிறுத்தி, 25 பேரை கைது செய்தனர்.
பெண்களை கேலி செய்து இழிவான செயல்களில் ஈடுபட்டு வரும் குடிகாரர்களை உருவாக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடுவோம் என்று முழக்கமிட்டவர்களை கைது செய்தது அப்ப்குதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.