
கடலூரில் மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலை மற்றும் நெடுஞ்சாலைகளில் அகற்றப்படாமல் இருக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு “ஸ்டிக்கர்” ஒட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் மொத்தம் 123 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஒரு சில கடைகளை தவிர மற்ற டாஸ்மாக் கடைகள் அகற்றப்படாமல் எப்போதும்போல செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.
இதனைக் கண்டித்து “டாஸ்மாக் கடைகளில் உள்ள பெயர் பலகைகளில் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் நடத்தப்படும்” என்று பா.ம.க. மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. அறிவித்திருந்தார்.
அதன்படி நேற்று, கடலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை பெயர் பலகையில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக மாவட்ட செயலாளர் சண்.முத்துக்கிருஷ்ணன் தலைமையில் மாநில துணை பொதுச்செயலாளர் பழ.தாமரைக்கண்ணன், மாநில துணை தலைவர் சண்முகம், சமூக நீதி பேரவை தலைவர் தமிழரசன், மாநில செயற்குழு உறுப்பினர் போஸ்ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் மாநில இளைஞரணி செயலாளர் சந்திரசேகரன், மாநில மாணவரணி துணை செயலாளர் கோபிநாத், மாவட்ட இளைஞரணி தலைவர் வாட்டர் மணி, மாநில இளைஞரணி விஜயவர்மன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கடலூர் அரசு போக்குவரத்து பணிமனை எதிரில் இருந்து ஊர்வலமாக சென்றனர்.
அப்போது அவர்கள் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், தமிழக அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பியபடி வந்தனர். அவர்கள் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஷேர் ஆட்டோ நிறுத்துமிடத்துக்குச் சென்றபோது, அவர்களை திருப்பாதிரிப்புலியூர் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் காவலாளர்கள் தடுத்து நிறுத்தி, போராட்டத்திற்கு அனுமதி கிடையாது என்று மறுத்தனர்.
ஆனால், தடையை மீறி டாஸ்மாக் கடை பெயர் பலகைக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக பா.ம.க.வினர் செல்ல முயன்றனர். உடனே அவர்களை காவலாளர்கள் தடுத்தனர். இருந்தும், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர். அப்போது நிர்வாகிகள் சிலர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண் உள்பட 29 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
மங்கலம்பேட்டையில் பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் அசோக்குமார் தலைமையில் மாவட்ட செயலாளர் சுரேஷ், மாணவரணி செயலாளர் கார்த்திக், ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ், மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல், நகர அமைப்பு செயலாளர் துரை, முன்னாள் நகர செயலாளர் ராமகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, பாலசுப்ரமணியன், ஞானவேல், முருகன் உள்பட ஏராளமானோர் மங்கலம்பேட்டை டாஸ்மாக் கடை பெயர் பலகையில் ஸ்டிக்கர் ஒட்டி போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து மாநில துணை பொதுச்செயலாளர் அசோக்குமார் உள்பட 50 பேரை காவலாளர்கள் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதேபோல் விருத்தாசலம் பாலக்கரை அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் ஸ்டிக்கர் ஒட்ட முயன்றதாக பா.ம.க. நகர செயலாளர் குணசேகரன் உள்பட 7 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
இதேபோல் வதிஷ்டபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடை பெயர் பலகையில் ஸ்டிக்கர் ஒட்ட முயன்ற பா.ம.க. மங்களூர் ஒன்றிய கிழக்கு செயலாளர் சுரேஷ், தொகுதி செயலாளர் வீரகோவிந்தன், மாநில செயலாளர் தனபால், ராஜராஜன் உள்பட 13 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
குறிஞ்சிப்பாடி இரயிலடி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள டாஸ்மாக்கடை பெயர் பலகையில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் தர்மலிங்கம் தலைமையில் பா.ம.க.வினர் வந்தனர். அவர்கள் அங்குள்ள பலகையில் ஸ்டிக்கர் ஒட்ட முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த குறிஞ்சிப்பாடி காவலாளர்கள், அவர்களைத் தடுத்தனர். இதையடுத்து தமிழக அரசை கண்டித்து பா.ம.க.வினர் முழக்கமிட்டு, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனவே தர்மலலிங்கம் உள்பட 24 பேரை காவலாளர்கள் கைது செய்து, அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடை பெயர் பலகையில் ஸ்டிக்கர் ஒட்ட பா.ம.க.வினர் முடிவு செய்திருந்தனர்.
அதன்படி பா.ம.க.நகர செயலாளர் செல்வ.பிரதீஸ், குணசேகரன், ஆதிநாராயணன், சரண்ராஜ் மற்றும் நிர்வாகிகள் பரங்கிப்பேட்டை, பு.முட்லூர், பெரியபட்டு ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கடை பெயர் பலகையில் ஸ்டிக்கர் ஒட்ட பா.ம.க.வினர் முயன்றனர். அப்போது அவர்களை காவலாளர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இப்படி கடலூர் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடை பெயர் பலகைகளில் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் 123 பேரை காவலாளர்கள் கைது செய்து திருமண மணடபங்களில் தங்கவைத்து பின்னர் மாலையில் விடுவித்தனர்.
பாமகவினரின் இந்தப் போராட்டம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.