
கடலூர்
எங்களுக்கு மாற்று இடம் தந்த பின்னர் நாங்களே வீடுகளை காலி செய்கிறோம். அதுவரை வீடுகளை காலி செய்ய வற்புறுத்த கூடாது என்று ரேசன் அட்டை உள்ளிட்ட அடையாள ஆவணங்களுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரேசன் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்த கிராம மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மாற்று இடம் வழங்கும்வரை வீடுகளை காலிசெய்ய சொல்லி வற்புறுத்த கூடாது என தெரிவித்தனர்.
கடலூர் வண்டிப்பாளையம் சாலை, லாரன்ஸ்சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் நத்தவெளி இணைப்பு சாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக நத்தவெளி சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு குடிசைகளை அகற்ற சம்பந்தப்பட்ட குடிசை வாசிகளுக்கு நகராட்சி நிர்வாகம் மூலம் நோட்டீசு வழங்கப்பட்டது.
இதையடுத்து தங்களுக்கு மாற்று இடம் வழங்க கோரி அமைச்சர் எம்.சி.சம்பத், ஆட்சியர் ராஜேஷ் மற்றும் நகரசபை ஆணையர் ஆகியோரிடம் பொதுமக்கள் மனு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நத்தவெளி சாலையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும், வீடுகளும் கட்டித்தரப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று நத்தவெளி பகுதி மக்கள் ரேசன் அட்டை, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை போன்ற அரசு ஆவணங்களை ஆட்சியரிடம் ஒப்படைக்க ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.
ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு பகுதியில் வந்ததும் அங்கே பாதுகாப்புக்கு நின்ற காவலாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதனால், அவர்கள் அங்கேயே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து நத்தவெளி பகுதி மக்கள் கூறியது:
“நத்தவெளி சாலையோரத்தில் நாங்கள் 170 குடும்பத்தினர் கடந்த 70 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இந்த நிலையில் திடீரென வீடுகளை காலி செய்ய சொல்லி நகராட்சி நிர்வாகம் எங்களுக்கு நோட்டீசு கொடுத்தது. அதை வாங்க மறுத்த நாங்கள் மாற்று இடம் வழங்க கோரி அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். அப்போது மாற்று இடம் இருக்கும் இடத்தை கண்டறிந்து வழங்கப்படும், வீடும் கட்டித்தரப்படும் என அமைச்சர் சம்பத் தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று (நேற்று) காலை நாங்கள் வசித்து வரும் வீடுகளை 15 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என நகராட்சி ஊழியர்கள் எங்களிடம் நோட்டீசு கொடுத்து கையெழுத்து வாங்க முயன்றனர். இதற்கு நாங்கள் மறுத்து விட்டோம்.
நாங்கள் அனைவரும் தின கூலி வேலை செய்து பிழைத்து வருகிறோம். எங்களது பிள்ளைகளை சிரமப்பட்டு படிக்க வைக்கிறோம். பொதுத் தேர்வு தொடங்க இருக்கிறது.
இந்தமாதிரியான கால கட்டத்தில் வீடுகளை காலி செய்ய சொல்லி நோட்டீசு கொடுக்கிறார்கள். எங்கள் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு நாங்கள் எங்கு போவோம். அவர்களின் படிப்பும் பாதிக்கப்படும்.
எனவே எங்களுக்கு மாற்று இடம் தந்த பின்னர் நாங்களே வீடுகளை காலி செய்கிறோம். அதுவரை வீடுகளை காலி செய்ய சொல்லி அதிகாரிகள் எங்களை வற்புறுத்த கூடாது” என்று அவர்கள் கூறினர்.
பின்னர் பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அதனை அடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.