
செய்யது குழுமம் சார்பில் பல்வேறு நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நெல்லை வண்ணார்பேட்டையை தலைமையிடமாக கொண்டுள்ள இந்த குழும நிறுவனங்கள் சார்பில் செய்யது பீடி, செய்யது பைனான்ஸ், செய்யது காட்டன் மில்ஸ் மற்றும் பே-வாக் ஆடையகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் சென்னை, நெல்லை, மதுரை, கோவை, திருச்சி உள்பட பல்வேறு நகரங்களில் செயல்படுகிறது.
இவற்றின் தலைமை அலுவலகம் நெல்லை வண்ணார்பேட்டையில் செயல்பட்டு வருகிறது. செய்யது குழும நிறுவனம் வருமான வரியை முறையாக செலுத்தாமல் செயல்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்தது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் செய்யது குழுமத்துக்கு சொந்தமான நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் உரிமையாளர்களின் வீடுகளில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று முதல் அதிரடி சோதனை நடத்தினர்.
நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகம், சந்திப்பு சிந்துபூந்துறையில் உள்ள செய்யது பைனான்ஸ் நிறுவனம், செய்யது லாட்ஜ், மூன்றடைப்பில் உள்ள செய்யது காட்டன் மில் நிறுவனம் மற்றும் பாளை ஐகிரவுண்டில் உள்ள செய்யது குரூப் நிறுவன உரிமையாளர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.நெல்லை, சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் 40க்கு மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
அதே போல் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ள செய்யது குரூப் நிறுவனத்துக்கு சொந்தமான பே-வாக் ஆடை தயாரிப்பு நிறுவனம் மற்றும் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள செய்யது பீடி குடோன்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடந்த இடங்களில் மத்திய பாதுகாப்புபடை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சோதனைகள் நிறைவுற்ற நிலையில் இந்நிறுவனம் சுமார் ரூ.90 கோடி வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்கண்ட நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகள் வீடுகளில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.