அனல் கக்கும் வெயில்..! பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிப் போகிறதா.? பள்ளிக்கல்வித்துறை முடிவு என்ன.?

By Ajmal KhanFirst Published Jun 5, 2023, 9:04 AM IST
Highlights

கோடை விடுமுறை முடிவடைந்து கடந்த ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாக  பள்ளி திறப்பு 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது வெயிலின் தாக்கம் குறையாமல் உள்ளதால் மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மீண்டும் பள்ளிகள் திறப்பு

பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு ஏப்ரல் மாதம் இறுதியில் முடிவடைந்தது. இதனையடுத்து மாணவர்களுக்கான கோடை விடுமுறையானது சுமார் ஒரு மாதம் காலம் விடப்பட்டிருந்தது. ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்களும் மீண்டும் பள்ளிக்கு செல்ல தயாராகிக்கொண்டிருந்த நிலையில் வெயிலின் தாக்கம் குறையாமல் உக்கிரமாக இருந்தது. 18 மாவட்டத்தில் வெயிலானது 100 டிகிரியை தாண்டியது. இதனையடுத்து பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளி வைக்க கோரிக்கை எழுந்த நிலையில் 1 ஆம் தேதிக்கு பதிலாக 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து வெளியூரில் இருந்து சென்னைக்கு திரும்ப 2200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அதிகரிக்கும் வெயில்

கேரளாவில் பருவமழை தொடங்கினால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் கேரளாவில் பருவமழை தொடங்காத காரணத்தால் வெயிலானது தினந்தோறும் அதிகரித்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் 108 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது. பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத நிலையானது நீடித்தது. இந்தநிலையில் நாளை மறுதினம் அதாவது ஜூன் 7 ஆம் தேதி பள்ளியானது திறக்கப்படவுள்ளது. வெயிலின் தாக்கம் குறையாமல் இருக்கும் நிலையில் பள்ளிகள் திறந்தால் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலையானது உருவாகும் என கூறப்படுகிறது. எனவே பள்ளிகள் திறப்பதை மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிகள் திறப்பு தள்ளி போகிறதா.?

இதனையடுத்து பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி போகுமா என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, தற்போது வரை எந்தவித முடிவும் எடுக்கவில்லையென என கூறப்படுகிறது. பள்ளி திறப்பு தேதி தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனைக்கு பிறகு அமைச்சரிடம் தெரிவிக்கப்படும் என்றும், அதனையடுத்து முதலமைச்சரிடம் கலந்தாலோசித்து தான் முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. எனவே தற்போது உள்ள நிலையில் எந்த வித ஆலோசனை கூட்டமும் திட்டமிடப்படவில்லையென தெரிவித்துள்ளனர். இருந்த போதும் ஒரு சில தனியார் பள்ளிகள் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து பெற்றோருக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியுள்ளனர்.  

இதையும் படியுங்கள்

தேனியை அச்சுறுத்திய அரிகொம்பன்.! மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை- மீண்டும் காட்டு பகுதியில் விட திட்டமா.?

click me!