குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதில் 5 பேர் தமிழர்கள் என தற்போது தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குவைத் தீ விபத்து- 40 பேர் பலி
குடும்ப வறுமைக்காக சொந்த நாட்டில் சரியான ஊதியம் இல்லாம காரணத்தால் வெளிநாட்டிற்கு வேலை தேடி செல்லும் நிகழ்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடனை வாங்கியும், வாங்கிய கடனுக்கு வட்டியை கட்டவும், தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் அரபு நாடுகளுக்கு வேலைகளுக்கு செல்கின்றனர். கட்டிடம் கட்டும் பணி, ஒட்டகம் மேய்க்கும் பணி, வெல்டிங் பணி, கழிவறை சுத்தம் செய்யும் பணி என ஏராளமான வேலைகளுக்கு செல்கின்றனர். அந்த வகையில்,
குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் மூச்சு திணறியும், தீயில் எரிந்தும் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் களம் இறங்கியுள்ளது.
5 தமிழர்கள் பலி- ஷாக் தகவல்
இந்த தீ விபத்தில் சிக்கிய தமிழர்கள் யார் .? யார் என்பதை அடையாளம் காணும் பணியானது தொடங்கியுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் தற்போதைய தகவலின் படி 5 பேர் தமிழர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் முட்டத்தைச் சேர்ந்த சின்னதுரை, ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பணன் ராமு, கோவில்பட்டியை சேர்ந்த வீராசாமி மாரியப்பன், செஞ்சியை சேர்ந்த முகமது ஷரீப், பட்டுக்கோட்டையை சேர்ந்த புனாஃப் ரிச்சர்டு ராய் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாடு வாழ் தமிழர் நலவாழ்வுத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தீ விபத்தில் காயம் அடைந்தவர்களில் எத்தனை தமிழர்கள் உள்ளார்கள் என்பது தொடர்பான தகவலும் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் உயிரிழந்த இந்தியர்களின் உடலை இந்தியா கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.