தேர்தல் நேரத்தில் மிகவும் கவனமுடன் இருக்குமாறு எடப்பாடி பழனிசாமி சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது. நாம் தமிழர் கட்சியும் தனித்து களத்தில் உள்ளது. அனைத்து கட்சிகளும் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.
முன்னதாக, மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இதனால், அரசியல் கட்சிகள் மிகவும் கவனமுடன் செயல்பட்டு வருகின்றன.
அந்த வகையில், எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம் மேற்கொண்ட போது, அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தனர். அப்போது வேட்பாளர் அந்த பெண்களின் தட்டில் பணம் போட முயன்றார். அதனை கவனித்த எடப்பாடி பழனிசாமி உடனடியாக அதனை தடுத்து நிறுத்தினார். ஆரத்தி தட்டில் பணம் போட்டால் அது வாக்காளர்களுகு ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்கு சமமாகி விடும். இது தேர்தல் நடத்தை விதிமீறல் என்பதால், உடனடியாக வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி அலர்ட் செய்தார்.
இந்த தேர்தலி திமுக பலம் வாய்ந்த கூட்டணியை அமைத்துள்ளது. பாஜக மெகா கூட்டணியை அமைத்துள்ளது. கடந்த தேர்தல் போன்று அல்லாமல் இந்த தேர்தலில் கண்டிப்பான வெற்றி பெற்று தனது தலைமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் ஒவ்வொரு விஷயத்தையும் எடப்பாடி பழனிசாமி மிகவும் கவனமுடன் கையாள்கிறார்.
அந்த வகையில், தான் சேலம் சம்பவமும் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். மேலும் பேசிய அவர்கள் திமுகவை முடிந்த அளவிற்கு டேமேஜ் செய்யவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள். அதன்படி, அதிமுக வழக்கறிஞர் அணியின் மாநில தலைவர் இன்பதுரை உள்ளிட்ட அதிமுக சீனியர் வழக்கறிஞர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திய எடப்பாடி பழனிசாமி, மிகவும் கவனமுடன் கழுகு போன்று கண்காணிக்குமாறு அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளாராம்.
மேலும், தேர்தல் களத்தில் விதிகளை மீறும் திமுக, பாஜகவினரை கண்டறிந்து உடனடியாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும் எனவும், அதிமுக வேட்பாளர்கள் மீது எதிரிகளால் அளிக்கப்படும் புகார்களை ஆராய்ந்து சட்ட ரீதியாக அந்த பிரச்சினைகளை உடனடியாக எதிர்கொள்ள வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வழக்கறிஞர்கள் அணியினருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.