Alert : விலை உயர்வு..கேன் குடிநீர் விலை உயர்கிறது..ஜனவரி 1 முதல் இதுதான் விலை..

By Raghupati RFirst Published Dec 27, 2021, 10:22 AM IST
Highlights

அன்றாடம் பயன்படுத்தும் கேன்  குடிநீரின் விலை ஜனவரி 1 முதல் உயர உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

சென்னை உள்ளிட்ட பெருநகர வாசிகளுக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இருப்பினும், பெரும்பாலானோர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேனை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஏராளமானவை ஐ.எஸ்.ஐ தரச்சான்று பெறாமல் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த ஆலைகளுக்கு அரசு சீல் வைத்தது. 

இருப்பினும் முறைகேடாக பல ஆலைகள் இயங்கி வருவதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், ஜனவரி 1-ம் தேதி முதல் குடிநீர் கேன் விலை உயர்த்தப்படுவதாக செங்குன்றம் பகுதி குடிநீர் உற்பத்தியாளர்கள் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், மூலப்பொருட்கள் விலை உயர்வால் வரும் ஒன்றாம் தேதி முதல் தண்ணீர் கேன் விலை உயர்த்தப்படுகிறது. 

300, 500 மில்லி, 2 மற்றும் 5 லிட்டர் கேன் பெட்டிகள் தலா 10 ரூபாயும், 20 லிட்டர் கேன்கள் மீது 2 ரூபாயும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்கள் 2 ரூபாய் விலை உயர்த்தி இருக்கிறார்கள். இதனால் 2 ரூபாய் தான் விலை உயரும் என்று நினைக்க வேண்டாம் மக்களே. 

உற்பத்தியாளர்கள் விநியோகிப்பாளர்களுக்கு 2 ரூபாய் உயர்த்தி இருக்கிறார்கள், அப்படியென்றால் கேன் குடிநீரை விநியோகிப்பவர்கள் மேலும் விலை உயர்த்துவார்கள் என்றே தெரிகிறது. கேன் குடிநீரை வீட்டுக்கு வீடு அல்லது அலுவலகம் என கொண்டு செல்லும் போக்குவரத்து செலவு அதிகரிப்பார்கள். இதனால் 30 முதல் 35 ரூபாய் வரை விற்கும் கேன் குடிநீர் மேலும் 5 ரூபாய் விலை உயர வாய்ப்பு உள்ளது.  

இந்த விலை உயர்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மூலப்பொருள் விலை உயர்வு மற்றும் வாட்டர்கேனின் விலை உயர்வு காரணமாக இந்த விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக வாட்டர் கேன் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இந்த விலை உயர்வு ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜி.எஸ்.டி கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகளால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். 

மேலும், கடந்த சில மாதங்களாக தக்காளி, கத்திரிக்காய், வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக நடுத்தர குடும்பத்தினர் செய்வதறியாமல் தவித்து வரும் நிலையில், தற்போது குடிநீர் கேன் விலை உயர்வு என்ற அறிவிப்பு பேரிடியாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்த செய்தி அனைத்து தரப்பு பொதுமக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!