அடுத்த எம்ஜிஆரா விஜய்? திரும்பும் அரசியல் பார்வை!

By Manikanda Prabu  |  First Published Jun 12, 2023, 1:25 PM IST

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது பற்றிய பேச்சுகள் மீண்டும் எழத்தொடங்கியுள்ள நிலையில், அவர் மீது பார்வை திரும்புவதற்கான காரணம் என்னவாக இருக்க முடியும்.


தமிழ்நாட்டு அரசியலும், சினிமாவும் ஒன்றுக்கொன்று அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக பின்னிப்பிணைந்துள்ளது. காங்கிரஸை ஓரங்கட்டி, திமுக ஆட்சியை பிடித்ததற்கு மிக முக்கிய காரணங்களில் சினிமாவும் ஒன்று. பேசிப்பேசி வளர்ந்த கட்சியான திமுக, தனது கொள்கைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்ல சினிமா வசனங்களை பயன்படுத்தியது. பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, முரசொலி மாறன், எம்ஜிஆர், ஜெயலலிதா, சிவாஜி என இந்த பட்டியலின் நீளம் அதிகம்.

‘தணிக்கை இல்லாமல் திரைப்படம் எடுத்தால் தனித்தமிழ்நாட்டை என்னால் பெற்றுத்தர முடியும்’ என்று சூளுரைத்தார் பேரறிஞர் அண்ணா. சினிமா மீதான பார்வையையும், பொதுமக்களிடம் அது ஏற்படும் தாக்கத்தையும் அவர் அன்றே கணித்திருந்தார். ஈவிகே சம்பத், கருணாநிதி, நெடுஞ்செழியன் போன்ற அண்ணாவின் படைத்தளபதிகள் போன்று கொள்கை பிடிப்புகளில் நெஞ்சுரம் கொண்டவரோ, பேச்சாற்றல் மிக்கவரோ எம்ஜிஆர் கிடையாது. ஆனால், எம்ஜிஆரால் பாமர மக்களை எளிதாக சென்றடைய முடியும்  என்று அண்ணா நம்பினார். அவரது சினிமா வசீகரம் பல தேர்தல்களில் திமுகவுக்கு வெற்றியை தேடித்தந்து அரியணையில் ஏற்ற உதவியது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக எம்ஜிஆர் தொடர்ந்து ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கும் அவரது சினிமா வசீகரம் அவருக்கு உதவியது. 

Tap to resize

Latest Videos

அடுத்து வந்த ஜெயலலிதா, அன்றைய வெற்றிடத்தை பயன்படுத்தி எம்ஜிஆரின் வாரிசாகவே அந்த இடத்தை நிரப்பினார். திராவிட சித்தாந்தங்கள் பேசி எம்ஜிஆர் இடத்தை அவர் நிரப்பவில்லை; மாறாக சினிமா வசீகரமே ஜெயலலிதாவை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தது. முதலில் திராவிட கட்சிகளுடன் பயணித்து பின்னர், காங்கிரஸில் இணைந்த சிவாஜியும் கூட தனக்கு இருக்கும் சினிமா பின்புலத்தை பயன்படுத்தி அரசியலில் கோலோச்ச நினைத்தார் அல்லது திமுகவை அழிக்க சிவாஜியை பயன்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டது என்றும் கூட கூறலாம். ஆனால், அவை பெரிதாக எடுபடவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு இருந்த வசீகரம் பாமர மக்களிடம் சிவாஜிக்கு இல்லை.

கலைஞர் கருணாநிதி பேச்சாற்றல், எழுத்தாற்றல் மிக்கவராக இருந்தாலும், திரைப்படங்களில் இடம்பெற்ற அவரது வசனங்களே அவரை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க உதவியது. இதனை நன்கு உணர்ந்த அவர், தனது கடைசி காலம் வரை திரைத்துறையினரை தனது கையில் வைத்து கொண்டார். அவரது பேரன் உதயநிதி ஸ்டாலினை சினிமாவில் இறக்கி ஆழமும் பார்த்தார்.

பாஜக கேட்கும் தொகுதிகள்... என்ன காரணம்? விட்டுக் கொடுக்குமா அதிமுக?

இடையில், டி.ராஜேந்தர், கே.பாக்யராஜ் என ஏராளமான திரைப்பிரபலங்கள் அரசியலில் கால்பதிக்க திட்டமிட்டு, பெரிதாக சோபிக்கவில்லை. அவர்கள் உள்பட பெரும்பாலான திரை நட்சத்திரங்கள் இங்குள்ள அரசியல் கட்சிகளின் மீதே சவாரி செய்து வருகின்றனர். எம்ஜிஆர் விட்ட இடத்தை கருப்பு எம்ஜிஆர் என்று வர்ணிக்கப்பட்ட விஜயகாந்த் பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்து அதனை அவர் பூர்த்தியும் செய்தார். அவரை கூட்டணிக்குள் இழுக்க அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் போட்டிபோட்டன. ஆனால், விஜயகாந்துக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு, குடும்பத் தலையீடு, அரசியல் நிலைப்பாடு உள்ளிட்ட காரணங்களால் அரசியல் அங்கீகாரத்தை இழக்கும் நிலைக்கு தேமுதிக சென்று விட்டது.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய ஆளுமைமிக்க வலுவான தலைவர்கள் இப்போது இல்லை. அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு பலரும் முயற்சித்து வருகிறார்கள். அந்த வரிசையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்தனர். எம்ஜிஆருக்கு இருந்த வசீகரம் ரஜினிக்கு இருந்தது. போர் வந்தால் களம் காணுவோம் என துப்பாக்கியில் இருந்து வெளிவரும் தோட்டாவாக சீரிய ரஜினிகாந்த், பின்னர் பிசுபிசுத்துப் போனார். கொரோனாவை காரணம் காட்டி அரசியலில் இருந்து விலகும் முடிவை ரஜினிகாந்த் அறிவித்தார். சக நடிகரான கமல்ஹாசன் தனிக்கட்சி ஆரம்பித்தாலும் பாமர மக்களின் வாக்குகளை அவரால் பெற முடியவில்லை.

இன்றைய காலகட்டத்தில் எம்ஜிஆர் போன்று சாமானியர்களின் ஆதரவைப் பெற்ற விசீகர நடிகர்களாக அஜித், விஜய் ஆகியோர் உள்ளனர். ஆனால், அஜித் அவரது பட ப்ரோமோஷன்களுக்கே போவதில்லை. எதிலுமே சற்று விலகியே இருக்கிறார். அவரது உலகம் தனியாகவே இருக்கிறது. நடிகர் விஜய் அப்படி அல்ல. ஆர்மபத்தில் இருந்தே அரசியல் கருத்துகளை தெரிவித்து வருகிறார். மக்கள் இயக்கம் என்ற அமைப்பு மூலம் பொதுமக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ளார். அவரது மக்கள் இயக்கத்தினர் உள்ளாட்சித் தேர்தலில் களம் கண்டு வெற்றியும் அடைந்துள்ளனர். எனவே, விஜய்யின் மீது இயல்பாகவே பார்வை திரும்புவதில் ஆச்சரியமில்லை.

click me!