இதுதான் சரத்குமார் தனது கட்சியை பாஜகவில் இணைத்ததற்கான காரணமா?

By Manikanda PrabuFirst Published Mar 13, 2024, 8:17 PM IST
Highlights

நடிகர் சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்ததற்கு அவரது மகள் வரலட்சுமிதான் காரணமா என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுடன் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைத்திருந்தது. பாஜகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வந்த சரத்குமார், அக்கூட்டணியில் இரண்டு தொகுதிகளை கேட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகி வந்தன.

இதனிடையே, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் சரத்குமார் திடீரென தனது கட்சியை பாஜகவுடன் நேற்று இணைத்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சரத்குமார் தனது கட்சியினை பாஜகவுடன் இணைத்தார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் சரத்குமார் பாஜகவுடன் தனது கட்சியை இணைத்துள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகி உள்ளது. அந்த வகையில், நடிகர் சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்ததற்கு அவரது மகள் வரலட்சுமிதான் காரணமா என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

கேரளா மாநிலம் விளிஞ்சம் கடற்கரையில் கடந்த 2021ஆம் ஆண்டு போதைப்பொருள்கள் மற்றும் ஏகே 47 உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் 300 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ) விசாரித்து வருகிறார்கள்.

இந்த வழக்கில் இலங்கை தமிழர்கள் 10 பேர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டு என்.ஐ.ஏ அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 14ஆவது நபராக ஆதிலிங்கம் என்பவரை கைது செய்து அவரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சேலையூரில் அண்மையில் கைது செய்யப்பட்ட ஆதிலிங்கத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு அரசியல், சினிமா தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர், நடிகை வரலட்சுமியிடம் உதவியாளராக பணிபுரிந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, விசாரணை வளையத்துக்குள் நடிகை வரலட்சுமி கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அவரிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவருக்கு சம்மன் அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகின.

ரூ.5 கொடுத்தாலும் அது உதவிதான்: குஷ்புவை சரமாரியாக தாக்கிய நடிகை அம்பிகா!

ஆனால், தனக்கும் ஆதிலிங்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என நடிகை வரலட்சுமி விளக்கம் அளித்திருந்தார். தன்னிடம் வேலை பார்த்த ஆதிலிங்கம் 5 ஆண்டுகளுக்கு முன்பே நின்று விட்டார் என தெரிவித்த வரலட்சுமி, தனது தாயாரிடம் மட்டுமே என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகவும், விசாரணைக்கு போதுமான ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

அதன்பிறகு, அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. எந்த முன்னேற்றமும் இல்லை. வழக்கு தொடர்பான எந்த செய்தியும் வரவில்லை. இந்த பின்னணியில், நடிகர் சரத்குமார் பாஜகவில் தனது கட்சியை இணைத்துள்ளாரா என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

click me!