இறப்பதற்குள் எங்களை மீட்க நடவடிக்கை எடுங்கள் – ஈரான் நாட்டில் அழுது புலம்பும் தமிழக மீனவர்கள்…

First Published Mar 3, 2017, 10:16 AM IST
Highlights
Irappatarkul take action to save us weeping fishermen in iran


நாகர்கோவில்

ஈரான் நாட்டில் அபராதம் செலுத்தியும் விடுவிக்காமல் 35 மீனவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை, இறப்பதற்குள் மீட்க வேண்டும் என்று அழுது புலம்புகின்றனர். அவர்களை மீட்க வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மீனவர்களின் குடும்பத்தினர் மனு கொடுத்தனர்.  

குமரி மாவட்டம் முட்டம், ராஜாக்கமங்கலம்துறை, கேசவன்புத்தன்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் சௌதி அரேபியா நாட்டில் இருந்து ஒரு விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது ஈரான் கடல் எல்லையைத் தாண்டியதாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 7–ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கான அபராதத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்திய பிறகும் மீனவர்கள் ஐந்து பேரும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை.

இதேபோல் கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர்கள் ஏழு பேரும், நெல்லை மாவட்டம் கூட்டப்புளி, இடிந்தகரையைச் சேர்ந்த மீனவர்கள் ஏழு பேரும் பக்ரைன் நாட்டில் இருந்து மூன்ற்உ விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற போது கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி ஈரான் கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள், இன்று வரை கடலிலேயே சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

ஈரான் நீதிமன்றத்தில் ரூ.13 இலட்சத்து 50 ஆயிரம் செலுத்திய பிறகும் மீனவர்களை ஈரான் கடலோர காவல்படை விடுவிக்காமல் சிறை வைத்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் பக்ரைன் நாட்டில் இருந்து மூன்று விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றபோது ஈரான் கடல் எல்லையை தாண்டியதாக ஈரானில் இக்கிஸ் என்ற தீவில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குமரி, நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 19 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் நேற்று நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

இவர்களுக்கு தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் தலைமைத் தாங்கினார்,

பின்னர் அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பது:

“ஈரான் நாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள குமரி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 35 மீனவர்களுக்கும் சரியாக உணவு வழங்கப்படவில்லை. உணவு, உடை, மருத்துவம், பாதுகாப்பு இல்லாமல் தமிழக மீனவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். நாங்கள் இறப்பதற்குள் எங்களை மீட்க நடவடிக்கை எடுங்கள் என்று கூறி சிறையில் உள்ள மீனவர்கள் அழுது புலம்புகிறார்கள். அங்கு தமிழக மீனவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது.

எனவே மத்திய அரசு, ஈரான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அளிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர், வெளியுறவுத்துறை மந்திரி, தமிழக முதலமைச்சர், மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோருக்கும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் மனுக்களை அனுப்பி வைத்துள்ளனர்.

click me!