
வாணியம்பாடி
வாணியம்பாடியில் கடத்தி செல்லப்பட்ட மகளை, தங்களுடன் அனுப்பி விடுமாறு கடத்தி சென்றவரின் வீட்டுக்கேச் சென்று பெற்றோர் போராட்டம் நடத்தினர்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தெக்கபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வனின் மகள் அனிதா (20).
இவர் சென்னையில் இருக்கும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணிப்புரிகிறார்.
அவரைக் கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் தேதி முதல் காணவில்லை. அவரைக் கூத்தாண்டகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சிவக்குமார் (40) என்பவர் கடத்திச் சென்றுவிட்டார் என்றும், அவருக்கு ஏற்கனவே திருமணாகி மனைவியும், 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் என் மகளை கடத்திச் சென்று மறைத்து வைத்துள்ளார் என்றும் அவரது தந்தை வெற்றிச்செல்வன், அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும், அவரை மீட்டு தரும்படி கோரிக்கையும் விடுத்துள்ளார்.
வெற்றிச்செல்வனின் புகாரின் அடிப்படையில் அம்பலூர் காவலாளர்கள் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 50 நாள்களாக தனது மகளை மீட்டு தர காவலாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் வெற்றிச் செல்வன் மற்றும் அவரது மனைவி இல்லறஜோதி என்பவரும் புத்துகோயிலில் உள்ள சிவக்குமார் என்பவரின் வீட்டின் முன்பு மண்ணெண்ணெய் கேனுடன் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட வெற்றிச்செல்வன் மற்றும் அவரது மனைவியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பட்டு அங்கிருந்து வீடு திரும்பினர்.
மகளைக் கடத்திச் சென்றுவிட்டனர் என்று கடத்திச் சென்றவரின் வீட்டிலேயே பெற்றோர்கள் போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.