
சமீபத்தில் எஸ்பியாக இருந்து டிஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் இன்று அளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
தமிழக காவல்துறையின் எஸ்பிக்களாக இருந்த 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சமீபத்தில் டிஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன், தூத்துக்குடி எஸ்பி அஸ்வின் கோட்னீஸ், அம்பத்தூர் துணை ஆணையர் சுதாகர், அமீத்குமார், டெல்லியில் பணியாற்றும் பிரதீப்குமார் ஆகியோருக்கு கடந்த மாதம் டிஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
டிஐஜியாக பதவி உயர்வு பெற்றாலும், அவர்கள் துணை ஆணையர்களாகவும், கண்காணிப்பாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இதுவரை அவர்களுக்கு பணி வழங்கவில்லை. பதவி உயர்வு பெற்ற இவர்கள் உள்பட மேலும் சில ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இன்று பணியிடமாற்றம் வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன், சென்னை போக்குவரத்து (தெற்கு) இணை ஆணையராகவும், அம்பத்தூர் துணை ஆணையர் சுதாகர் சட்டம் ஒழுங்கு (வடக்கு) இணை ஆணையராகவும் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதுதவிர, பரங்கிமலை துணை ஆணையர் கல்யாண், தி.நகர் துணை ஆணையர் சரவணன், துணை ஆணையர் லட்சுமி, நுண்ணறிவு துணை ஆணையர் விமலா உள்ளிட்டோரும் மாற்றம் செய்யப்பட உள்ளனர். போக்குவரத்து இணை ஆணையர் பவானீஸ்வரி வேலூர் டிஐஜி பணி இடமாற்றம் செய்யப்பட உள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.