
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் - அஜிஸா தம்பதியின் ஒன்றரை வயது மகனுக்கு தலையில் நீர் கோர்த்த பிரச்சினை காரணமாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவரது குழந்தையை அனுமதித்துள்ளார். குழந்தையின் கையில் ட்ரிப்ஸ் போடப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு குழந்தையின் கை கருப்பாக மாறியுள்ளது. தொடர்ந்து அக்குழந்தையின் கை மேலும் அழுகியதால், குழந்தையின் கையை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்குழந்தையின் கை அகற்றப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அலட்சியத்தால் தங்களது குழந்தையின் கை அகற்றப்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அரசு மருத்துவர்கள் சரியான நேரத்திற்கு வர வேண்டும்: ககன்தீப்சிங் பேடி உத்தரவு!
இந்த சம்பவம் குறித்து விசாரணை குழு அமைத்திருப்பதாகவும், தவறு ஏற்பட்டு இருந்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். குழந்தையை நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்ட அவர், கவனக்குறைவு கண்டறியப்பட்டல் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தை கை இழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், இரத்த ஓட்டம் பாதித்ததால் குழந்தையின் உயிரைக்காப்பாற்ற வலது கையை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: “pesudomonas என்ற கிருமியால் ஏற்படும் மூளைத்தொற்று ரத்த நாளத்தை பாதித்ததால் வலது கையில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது. குழந்தைக்கு இரத்தநாள அடைப்பு மருந்தினாலோ, மற்ற சிகிச்சை முறைகளாலோ ஏற்படவில்லை. வென்ஷன் (vention) ஊசியை தமனியில் போடவில்லை என்பது பெற்றோர் மருத்துவர்களின் வாக்குமூலத்தில் உறுதியானது. குழந்தை அனுமதிக்கப்பட்ட உடனேயே காலதாமதமின்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. குழந்தையின் உயிரை காக்கவே கை அகற்றப்பட்டது. இரத்த ஓட்டம் பாதித்ததால் குழந்தையின் உயிரைக்காப்பாற்ற வலது கையை அகற்றவேண்டிய சூழல் ஏற்பட்டது. மருந்து கசிவினால் இரத்த ஓட்ட பாதிப்பு ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்படுகிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.