
தேனி
போடி- அகமலை சாலைப் பணியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று புரட்சிகர இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனியில் மலை கிராம மக்களுக்கு சாலை வசதி செய்து தரக் கோரி புரட்சிகர இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பங்களாமேடு திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலர் லெனின், மாவட்டச் செயலர் முனிச்சாமி, தேனி ஒன்றியச் செயலர் சண்முகப்பிரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "போடி- அகமலை சாலைப் பணியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
அகமலை மலை கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தரவேண்டும்.
அரசு சலுகைகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்க வேண்டும்" போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அகமலை, அண்ணாநகர், கரும்பாறை, எருமைத்தொழு, ஊரடி, ஊத்துக்காடு, வாழைமரத்தொழு, விக்கிரமாதித்தன்தொழு, கூணியாறு, கானாமஞ்சி, முத்துக்கோம்பை, உலக்குருட்டி ஆகிய மலை கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.