கந்துவட்டி கொடுமை... ஆட்சியர் அலட்சியம்..! குடும்பத்துடன் தீக்குளித்த கொடூரம்..! தீக்குளித்தவரின் தம்பியின் மண்டை உடைப்பு..!

First Published Oct 23, 2017, 12:25 PM IST
Highlights
interest issue family suicide attempt


கந்துவட்டி கொடுமை தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இசக்கிமுத்து என்பவர் குடும்பத்துடன் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் காசிதர்மம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவர் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் வட்டிக்கு கடன் பெற்றுள்ளார். வாங்கிய தொகையை விட அதிகமாக வட்டி செலுத்திய பிறகும் அவரிடம் மேலும் வட்டி கேட்டு வற்புறுத்தியாகக் கூறப்படுகிறது.

கந்துவட்டி கொடுமை தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் நான்கு முறை புகார் அளித்துள்ளார். எனினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தொடர்ந்து கந்துவட்டி கொடுமையால் இசக்கிமுத்து பாதிக்கப்பட்டுள்ளார்.

கந்துவட்டி கொடுமையை தாங்க முடியாமலும் இதுதொடர்பாக மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததாலும் மனமுடைந்த இசக்கிமுத்து, தன் குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

இசக்கிமுத்து, அவரது மனைவி சுப்புலட்சுமி, இவர்களது 2 பெண் குழந்தைகள் ஆகியோர் குடும்பத்துடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனடியாக 4 பேரும் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை நேரில் சென்று மருத்துவமனையில் பார்வையிட்ட நெல்லை மாவட்ட ஆட்சியர், ஏற்கனவே இசக்கிமுத்து கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டதாகவும் அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அப்படி இருக்கும் நிலையில், இசக்கிமுத்து குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இசக்கிமுத்துவின் தம்பி முருகன், சோகம் தாங்காமல் சுவரில் மோதிக்கொண்டதால் அவரது மண்டை உடைந்து இரத்தம் கொட்டியது. இதையடுத்து அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகமே பரபரப்பாக உள்ளது. இதன்பிறகாவது நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
 

click me!