
கன்னியாகுமரி அருகே 8 ஆம் வகுப்பு மாணவிக்கு ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அனுப்பிய உளவுப் பிரிவு காவலர் செந்திலை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாக்குமரி மாவட்டம் களியக்காவிளையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தமது புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் அடையாளப் படமாக வைத்துள்ளார்.
அந்த வாட்ஸ் ஆப் எண்ணுக்கு புதிய எண் ஒன்றில் இருந்து தொடர்ந்து 4 நாட்களாக ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் வந்துள்ளன.
ஒரு முறை ஆபாச வீடியோக்களின் மத்தியில் தமது புகைப்படமும் வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக அந்த மாணவி தந்தையிடம் சொல்லி களியக்காவிளை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து ஆபாச படம் வந்த செல்போன் எண் இருந்த சிக்னல் டவர்களை போலீசார் சோதித்த போது, கடந்த 5 ஆம் தேதி சென்னை குமரன்நகர் காவல்நிலையத்தில் கடைசியாக அந்த எண்ணின் செயல்பாடு துண்டிக்கப்பட்டது தெரிய வந்தது.
2 நாட்கள் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அந்த எண் செயல்பாட்டில் இருந்ததும் கண்டறியப்பட்டது.
இதன்மூலம் போலீசார் சென்னை குமரன் நகர் காவல்நிலையத்தைச் சேர்ந்த உளவுப்பிரிவு காவலர் செந்தில் தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் என்பதை கண்டுபிடித்தனர்.
பின்னர், சென்னை விரைந்த போலீசார் செந்திலை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், போலி ஆவணங்களைக் கொண்டு சிம்கார்ட் வாங்கியதும், அதன் மூலம் பெண்களுக்கு ஆபாசப்படங்களை அனுப்பி தொல்லை கொடுத்ததையும் ஒப்புக் கொண்டார்.
தொடர்ந்து செந்திலை நீதிபதி அப்துல் சலாம் முன் ஆஜர்படுத்திய போலீசார் குழித்துறை கிளை சிறையில் அடைத்தனர்.