
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 1 கோடியே 84 லட்சம் குடும்பங்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்புத் துண்டு, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மு.க. ஸ்டாலின் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்துப் பதிவு இது...
“கரும்பு விவசாயிகள் வாழ்வில் வளம் பெறவும், கிராமங்களில் சிறு தொழிலாக செய்யப்படும் வெல்ல உற்பத்தி மேம்படவும், இந்த வருடம் பொங்கல் பரிசாக தமிழக அரசு அறிவித்துள்ள பொருட்களில் சர்க்கரைக்குப் பதில் தி.மு.கழக ஆட்சியில் வழங்கப்பட்டது போல் வெல்லம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.