
அரசு மற்றும் பொது உடமை குறித்த தகவல்களை அறிவதற்காக இந்திய அரசு சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதில், அரசு சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் கோரிக்கையாக மனு தாக்கல் செய்தால், 30 நாட்களில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், அதற்கான விளக்கத்தை அளிப்பார்கள்.
இதேபோன்று பல்வேறு அரசு துறைகளின் நடவடிக்கை மற்றும் செய்துள்ள பணிகள், நலத்திட்டங்கள் குறித்து சமூக ஆர்வலர்கள் மனு செய்து, பொது நல வழக்குகள் தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்தவர் காசிமயன். கடந்த, 2016ம் ஆண்டு ஜூலையில், உணவு பாதுகாப்பு துறைக்கு சம்பந்தப்பட்ட 7 தகவல்களை கேட்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு செய்தார். அவர் அனுப்பிய கடிதம், பல்வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டு, சமீபத்தில் அவருக்கு பதில் வந்துள்ளது.
அதில், 3 கேள்விகளுக்கு மட்டுமே பதில் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற கேள்விகளுக்கு, அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, துறைகளுக்கு இடையில் நடந்த கடித பரிமாற்றங்களின் நகல்களை அனுப்பி உள்ளனர். நகல்களின் எடை மட்டும் 5 கிலோ. இதனால், மனுதாரர் அதிர்ச்சியடைந்தார்.
மனுதாரரின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய உணவு பாதுகாப்பு துறை, 5 கிலோ பேப்பரை கொடுத்து வீணடித்ததுடன், பொது மக்களின் பணத்தையும் விரயம் செய்துள்ளது. உணவு பாதுகாப்பு துறையின் இந்த அலட்சிய போக்கு தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.