தமிழகத்துக்கு ‘ரெட்’ அலெர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களில் நேற்று முதல் அதி கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், தென் தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான அதிகபட்ச மழை அளவு தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. குறிப்பாக காயல்பட்டினத்தில் 24 மணி நேரத்தில் 306 மிமீ மழை பெய்துள்ளது.இதுவரை பெய்யாத மழை அளவு இதுவாகும். இந்நிலையில் தமிழகத்துக்கு ‘ரெட்’ அலெர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழக கடற்பகுதியில் மற்றும் வட தமிழக பகுதிகளை நோக்கி வீசும் வலுவான கிழக்கு திசை காற்று காரணமாகவும் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று ‘இந்திய வானிலை ஆய்வு மையம்’ தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு கன முதல் முதல் கனமழைக்கு ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்புள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, வரும் 28-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, டெல்டா மாவட்டங்கள் மற்றும்புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடியமிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.