இவ்வளவு மழையா..? வரலாற்றில் இல்லாத அளவுக்கு மழை பெய்த தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி

By Raghupati R  |  First Published Nov 26, 2021, 9:57 AM IST

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில்  வரலாற்றில் இல்லாத அளவுக்கு மழை பெய்திருக்கிறது.


தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களில் நேற்று முதல் அதி கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், தென் தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான அதிகபட்ச மழை அளவு தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 30 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதுவே தென் தமிழகத்தில் இந்த ஆண்டு பதிவான அதிகபட்ச மழை அளவாகும். 

Tap to resize

Latest Videos

undefined

அதேபோல், தூத்துக்குடியில், 26. 6 சென்டிமீட்டரும், திருச்செந்தூரில் 24 சென்டிமீட்டரும் மழை பெய்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தூத்துக்குடி மாவட்டத்தில் 3 இடங்களில் அதிகனமழை பெய்துள்ளது. காயல்பட்டினத்தில் நேற்று காலையில் இருந்து இன்று காலை 6 மணி வரை 24 மணி நேரத்தில் 306 மிமீ மழை பெய்துள்ளது. இது அங்கு பெய்த மிக அதிக மழையாகும். இதனால்  காயல்பட்டினம் முழுவதும்  சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளம் போன்று காட்சி அளிக்கிறது. ஆறுகளில் நீர் நிரம்பி வெள்ளம் போல ஓடிக்கொண்டு இருக்கிறது. 6 மணி நேரத்தில் இங்கு 150 மிமீக்கும் அதிகமான மழை நேற்று காலை பெய்தது. தூத்துக்குடி 266.60 மிமீ மழையை நேற்று பெற்றது. 

திருச்செந்தூர் 248 மிமீ மழையை கடந்த 24 மணி நேரத்தில் பெற்றது. அதிலும் நேற்று காலை 6 மணி நேரத்தில் திருச்செந்தூரில் 175 மிமீ மழை பெய்துள்ளது, ஸ்ரீவைகுண்டம் 179மிமீ, குலசேகரப்பட்டினம் 158 மிமீ, சாத்தான்குளம் 121மிமீ, ஒட்டபிடாரம் 121மிமீ, மணியாச்சி 87மிமீ, கடம்பூர்90 மிமீ, வேதநத்தம் 80 மிமீ, எட்டயபுரம் 78 மிமீ, கோவில்பட்டி 71 மிமீ அளவு மழை பெய்துள்ளது. இதேபோல திருச்செந்தூர் முருகன் கோவில் உள்ளே வெள்ளநீர் புகுந்தது. கோவில் வளாகம் முழுவதும் முழங்கால் முழுக்க தண்ணீர் நிற்பதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி நகரில் பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தூத்துக்குடி பேருந்து நிலையம் மற்றும்  ரயில் நிலையமும் இதிலிருந்து தப்பவில்லை. 

குறிப்பாக ரயில் நிலையத்தில் மழைநீர் தேங்கி தண்டவளங்களை மூழ்கடித்தது. தூத்துக்குடியில் இருந்து வழக்கமாக 8.15-மணிக்கு சென்னைக்கு செல்லக்கூடிய முத்து நகர் எக்ஸ்பிரஸ் மாற்றாக,  நேற்று இரவு 12 மணிக்கு சென்றது. மழைத் தண்ணீரை அகற்ற காலதாமதம் ஆகியதால், மைசூர் ரயில் இரவு 11.45 மணிக்கும், இதைத்தொடர்ந்து முத்துநகர் எக்ஸ்பிரஸ் அதிகாலை 3.15 மணிக்கும் புறப்பட்டு சென்றது.கிட்டத்தட்ட சுமார் ஆறு மணி நேரம் காலதாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.மழையினால் பொதுமக்கள் பலரும் அவதிப்பட்டுவருகின்றனர்.

click me!