இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இரயில் மறியல் போராட்டம்; 33 பேர் உடனடி கைது...

First Published Feb 14, 2018, 8:03 AM IST
Highlights
Indian Democratic Youth Association is held in rail block protest 33 people arrested


திண்டுக்கல்

"பணி ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை கைவிட கோரி திண்டுக்கல்லில் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 33 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

"மத்திய அரசு இரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்,

பணி ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அச்சங்கத்தின் மாநில துணைச் செயலர் ரெஜீஸ்குமார் தலைமையில் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

பழனி இரயில் நிலையம் முன்பு ஏடிஎஸ்பி. சீனிவாசன் தலைமையில் ஏராளமான இரயில்வே காவலாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். எனினும், போராட்டக் குழுவைச் சேர்ந்த ஐந்து பெண்கள் உள்பட 33 பேர் தனித்தனியே பிரிந்து, இரயில் நிலைய வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தடுக்க முயன்றபோது, காவலாளர்களுக்கும், போராட்டக் குழுவினருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. பின்னர், பலரும் தரையில் படுத்துக்கொண்டு போராட்டத்தை தொடர்ந்தனர். எனினும், போராட்டத்தில் ஈடுபட்ட 33 பேரையும் காவலாளர்கள் அதிரடியாக கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.      

இந்த போராட்டத்தால், மதுரையிலிருந்து கோவை செல்லும் இரயில் மற்றும் திருவனந்தபுரத்திலிருந்து மதுரை செல்லும் இரயில்கள் புறப்பட சில நிமிடங்கள் தாமதமானது.

 

click me!