ஓய்வூதியத்திற்காக காத்திருக்கும் 91 வயது சுதந்திரப் போராட்டத் தியாகி; நேரில் ஆஜாராகுமாறு நீதிமன்றம் உத்தரவு...

First Published Feb 14, 2018, 7:54 AM IST
Highlights
91-year-old freedom fighter waiting for pension Court order to appear in person ...


திண்டுக்கல்

மாநில அரசின் ஓய்வூதியம் கேட்டு 91 வயது சுதந்திரப் போராட்டத் தியாகி மனு அளித்த வழக்கில் "அனைத்து ஆவணங்களுடன் திண்டுக்கல் ஆட்சியர் முன்பு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்" என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பண்ணைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜூலு (91). சுதந்திரப் போராட்டத் தியாகியான இவர் மாநில அரசு வழங்கும் ஓய்வூதியம் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "பதினைந்து வயதில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதால் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு 1942 - 1943 வரை சிறையில் இருந்தேன். இதற்கு தியாகிகள் மாயாண்டி பாரதி, பெரியசாமி ஆகியோர் சான்றிதழ் அளித்துள்ளனர்.

இந்தச் சான்றிதழுடன் மாநில அரசின் ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்தேன். ஆனால், இதுவரை ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. எனவே, ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரருக்கு இரண்டு வாரங்களில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மாநிலப் பொதுத்துறை இணைச் செயலர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "தியாகிகள் ஓய்வூதியம் பெற சிறையில் அடைக்கப்பட்டபோது சம்பந்தப்பட்டவருக்கு 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அந்த நிபந்தனையை மனுதாரர் பூர்த்தி செய்யவில்லை. வயது தொடர்பாக உள்ளூர் மருத்துவரிடம் சான்று பெற்றுள்ளார். அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தக் குறைகளைத் தனி நீதிபதி கருத்தில் கொள்ளவில்லை" என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதாஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "மனுதாரர் அனைத்து ஆவணங்களுடன் திண்டுக்கல் ஆட்சியர் முன்பு பிப்ரவரி 22-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும். அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

click me!