
திருநெல்வேலி
ருபெல்லா தடுப்பூசியை தயாரித்தது இந்திய நிறுவனம் என்றும், அமெரிக்கா, ஜப்பான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிலும் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்றும் குழந்தைகள் நல மருத்துவர்கள் விளக்கமளித்தனர்.
அரசு சார்பில் குழந்தைகளுக்கு போடப்படும் தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசியினால் ஏற்படும் பயன்கள் குறித்து திருநெல்வ்வேலியில் குழந்தைகள் நல மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.
இந்த விளக்கக் கூட்டத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
தட்டம்மை தடுப்பூசி குறித்து குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்க தலைவர் திருமலைக்கொழுந்து உள்ளிட்ட மருத்துவர்கள் கூறியது:
“தமிழ்நாட்டில் தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய் தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. பிறந்து 9 மாதமான குழந்தைகள் முதல் 15 வயது வரை உளள அனைத்து குழந்தைகளுக்கும் இந்த தடுப்பூசி போடப்படுகிறது.
தமிழ்நாட்டில் 1 கோடியே 8 இலட்சம் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய் தடுப்பூசி முகாம் கடந்த 6-ஆம் தேதி தொடங்கியது. புதன், ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் முகாம் நடைபெறுகிறது.
பயிற்சி பெற்ற அனுபவம் உள்ள பணியாளர்கள் இந்த தடுப்பூசியை போடுகிறார்கள். இந்த முகாம் வருகிற 28-ஆம் தேதி வரை நடக்கிறது.
முதல் கட்டமாக பள்ளிக்கூடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து அங்கன்வாடி மையங்களிலும், அதன் பிறகு விடுபட்டவர்களுக்கு அவர்கள் இருப்பிடப்பகுதிக்குச் சென்று தடுப்பூசி போடப்படும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 7 இலட்சத்து 63 ஆயிரம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 1 இலட்சத்து 59 ஆயிரத்து 90 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி போடுவதால் குழந்தைகளுக்கு பாதிப்புகள் ஏற்படுவதாக சிலர் தவறான தகவல்களை வாட்ஸ்-ஆப், முகநூல், போன்ற சமூக வளைதளங்களில் வெளியிட்டதால், பல குழந்தைகளின் பெற்றோர்கள் பயந்து இந்த தடுப்பூசியை போட முன்வருவதில்லை.
இந்த தடுப்பூசி போடுவதால் குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி குழந்தைகளுக்கு பாதுகாப்பானது.
தட்டம்மை என்பது குழந்தைகளுக்கு காய்ச்சலுடன் உடலில் தடிப்புடன் வரும் அம்மை நோயின் ஒருவகை ஆகும். மற்ற அம்மை நோய்களை போல் இல்லாமல் தட்டம்மை நோய் நிமோனியா எனப்படும் தீவிர நெஞ்சுச்சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
தட்டம்மை நோயால் கடந்த 2015-ம் ஆண்டு இந்தியாவில் 70 ஆயிரம் குழந்தைகள் இறந்துள்ளன. இதனால்தான் இந்த தடுப்பூசி போடுவது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நோய்க்கான தடுப்பூசி கடந்த 1980-ம் ஆண்டு முதல் தனியார் மருத்துவமனைகளில் போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல கோடி குழந்தைகளுக்கு தட்டம்மை நோய் தடுப்பூசி பாதுகாப்பாக போடப்பட்டுள்ளது.
ரூபெல்லா என்பது காய்ச்சல், நெறிகட்டுதல் மற்றும் தோலில் தடிப்பு ஆகிய அறிகுறிகளுடன் வருகிற அம்மை நோயாகும். இந்த நோய் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஏற்பட்டால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு காது கேளாமை, கண் குறைபாடு, இருதய பாதிப்பு, மூளை வளர்ச்சி குறைபாடு உள்ளிட்ட பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இந்த கொடிய நோயில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக அரசு மூலம் இலவசமாக இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த தடுப்பூசியை புனேயில் உள்ள ஒரு இந்திய மருத்துவ நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. இது வெளிநாட்டு ஊசி இல்லை.
அமெரிக்கா, ஜப்பான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிலும் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தட்டம்மை நோயை முற்றிலும் ஒழிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இது குறித்து வதந்தியாக பரப்பப்படும் கருத்துக்களை யாரும் நம்பவேண்டாம்” என்று அவர்கள் விளக்கமளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், நெல்லை சுகாதாரத்துறை துணை இயக்குனர் ராம்கணேஷ், மாநகர நல அலுவலர் மருத்துவர் பொற்செல்வன், ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீரான் மைதீன், குழந்தைகள் நல மருத்துவர்கள் ஆனந்தி, மாணிக்கவாசகம், நல்லகுமார், ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.