
பணகுடி,
பணகுடியில், முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் உருவான அதிநவீன ஏவுகணை எந்திரத்தின் சோதனையை வெற்றிகரமாக நடத்தி இஸ்ரோ புதிய சாதனையை படைத்துள்ளது.
நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த மகேந்திரகிரி மலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) மையம் அமைந்துள்ளது.
‘கிரையோஜெனிக்’ எனப்படும், அதிநவீன எந்திரங்களை தயாரிக்கும் மையமாக மகேந்திரகிரி இஸ்ரோ மையம் விளங்குகிறது.
இஸ்ரோ சார்பில் பி.எஸ்.எல்.வி. வகை ஏவுகணைகள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. அதில் பயன்படுத்தக்கூடிய கிரையோஜெனிக் எந்திரங்களை மகேந்திரகிரி மையம்தான் வடிவமைத்துக் கொடுத்து வருகிறது.
கிரையோஜெனிக் எந்திரங்கள் வடிவமைப்பில் சில தொழில்நுட்பங்கள் வெளிநாட்டில் இருந்து கடந்த காலங்களில் வாங்கப்பட்டு வந்தன. ஆனால் முழுவதும் இந்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிநவீன கிரையோஜெனிக் எந்திரத்தை மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் உருவாக்கி இந்திய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
அந்த எந்திரத்தின் இறுதிக்கட்ட சோதனை நேற்று இஸ்ரோ மைய தலைவர் கிரண்குமார் மற்றும் மூத்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள் முன்னிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் மகேந்திரகிரி மையத்தில் நடந்தது. அப்போது, அதிநவீன கிரையோஜெனிக் எந்திரத்தை இயக்கி பரிசோதிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 640 வினாடிகள் நடைபெற்ற இந்த சோதனையானது வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. அப்போது விஞ்ஞானிகள், பொறியாளர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்தனர்.
இதை தொடர்ந்து இஸ்ரோ மைய தலைவர் கிரண்குமார் செய்தியாளர்களிடம் கூறியது:
“முழுவதும் இந்திய தொழில்நுட்பத்தில் உருவான கிரையோஜெனிக் எந்திரத்தின் இறுதிக்கட்ட சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது. இது இஸ்ரோவின் புதிய சாதனை ஆகும். கிட்டத்தட்ட 4 டன் எடையை விண்வெளிக்கு சுமந்து செல்லும் திறனுடன் இந்த எந்திரம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
பி.எஸ்.எல்.வி. மார்க் – 3 சி – 25 ஏவுகணையில் இந்த எந்திரத்தை பொருத்தி விண்வெளிக்கு அனுப்ப உள்ளோம்.
வருகிற ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்வெளிக்கு அந்த ஏவுகணையை ஏவ உள்ளோம். இந்த ஏவுகணை மூலம் பல்வேறு செயற்கைகோள்கள் விண்வெளிக்கு அனுப்பப்படும். எனவே முக்கியத்துவம் வாய்ந்த இந்த சோதனை 100 சதவீத வெற்றியை பெற்றிருப்பது அனைவருக்கும் உற்சாகத்தை அளித்துள்ளது” என்று அவர் கூறினார்.