
India's longest sea bridge in Chennai: A grand project worth Rs. 25,000 crore! வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்காக பல ஊர்களில் இருந்து சென்னைக்கு மக்கள் இடம்பெயர்ந்து வருகிறார்கள். இதன் காரணமாக நாளுக்கு நாள் சென்னையில் மக்கள் தொகை அதிகமாகி வருகிறது. போக்குவரத்து நெரிசலும் உச்சத்தை தொட்டு வருகிறது. எனவே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கே பல மணி நேரம் ஆகும் நிலை உள்ளது. எனவே பல மணி நேரம் சாலையிலேயே காத்திருக்கும் நிலை உள்ளது. இந்த நிலையில் தான் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் பொதுமக்களுக்கு பெரிய அளவில் உதவியாக உள்ளது. இதனால் குறிப்பிட்ட இடத்திற்கு விரைவாக சென்று சேர வாய்ப்பு ஏற்படுகிறது. இதன் அடுத்தக்கட்டமாக சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முயற்சியாக, கடல் பால திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 27,600 கோடி ரூபாய் செலவில் கடல் வழி மேம்பாலம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து தமிழக சட்டசபையில் அறிவித்தது. இந்தத் திட்டம் சென்னையின் போக்குவரத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும், இத்தகைய கடல் மேல் பாலங்கள் இயற்கை எழிலை மேம்படுத்துவதுடன், சுற்றுலாவையும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எண்ணூரிலிருந்து பூஞ்சேரி வரை 65 கிலோமீட்டர் தூரத்திற்கு கடலுக்கு மேல் பாலம் அமைக்கும் மிகப் பெரிய திட்டத்தை முன்வைத்து உள்ளது தமிழக அரசு. இந்த திட்டத்தின் மூலம் தற்போது கிழக்கு கடற்கரை சாலையின் போக்குவரத்து நெரிசலை பெரும் அளவில்குறைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய பாலம் அமைக்கப்படுவதால், திருவான்மியூரில் இருந்து மாமல்லபுரம் வரையிலான பகுதியில் போக்குவரத்துகளால் ஏற்படும் கால விரயம் குறையும் என நம்பப்படுகிறது.
இந்தத் திட்டம் தொடர்பாக சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ள ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த செலவாக சுமார் ரூ. 27,600 கோடி வரை தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. திட்டம் நிறைவேறினால், இது இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமாகும் சாதனை படைக்கும்.
இந்த கடல் பாலம் பெரும்பாலும் கடல் வழியாக செல்லுவதால், நிலம் கையகப்படுத்துதல் குறைவாகவே இருக்கும். இதனால் குடியிருப்பு பகுதிகள் மீது தாக்கம் குறைவாகும். மீனவர்களிடமிருந்து எதிர்ப்பு வாய்ப்பு குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பாலம் கட்டும் பணி படிப்படியாக நடைபெறும்.
முதற்கட்டமாக கலங்கரை விளக்கம் முதல் கொட்டிவாக்கம் வரை பணி நடைபெறும், அதன் பின் வடக்கே எண்ணூருக்கும் தெற்கே பூஞ்சேரிக்கும் பணி விரிவாக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கடல் பாலம், எண்ணூரை பூஞ்சேரியுடன் இணைக்கும் சென்னை வெளிவட்டச் சாலை (133 கி.மீ.) திட்டத்துடன் இணைந்திருக்கும், மேலும் மாநிலத்தின் கடலோர சாலை கட்டமைப்பை மேம்படுத்தும் முக்கிய அங்கமாக இருக்கும் என கூறப்படுகிறது.
முன்னதாக தமிழக அரசு கலங்கரை விளக்கத்திலிருந்து நீலாங்கரை வரையில் கடல் மேல் பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராய திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது இந்த திட்டம் எண்ணூரில் இருந்து பூஞ்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தி பின்னர் சுற்று சூழல் பாதுகாப்பு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர் திட்டம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது உள்ள ஒரே கடல் பாலம் பாம்பன் பாலமாகும். மிகவும் பிரபலமான பாலம் பாம்பன் பாலம் இது ராமநாதபுரம் மாவட்டத்தில், மண்டபத்தையும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில் பாக் ஜலசந்தியில் 2.07 கிலோமீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ளதாகும்.