சுதந்திர தினத்தையொட்டி, சென்னை புனிதஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் 3ஆவது முறையாக மூவர்ண கொடியை முதல்வர் ஸ்டாலின் ஏற்றவுள்ளார்
இந்தியா முழுவதும் 77ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி (இன்று) கொண்டாடப்படவுள்ளது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் மூவர்ண கொடியேற்றி மரியாதை செலுத்தவுள்ளார். மாநில முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையை மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி பெற்றுத் தந்த நிலையில், அவரது மகனும், முதல்வருமான ஸ்டாலின் 3ஆவது முறையாக கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்கவுள்ளார். முன்னதாக, சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடி கம்பம் தமிழக பொதுப்பணித்துறையால் ரூ.45 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
கோட்டைக்கு வரும் முதல்வர் ஸ்டாலினை தலைமை செயலாளர் வரவேற்று, காவல் துறை அதிகாரிகளுக்கு அறிமுகம் செய்து வைப்பார். தொடர்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிடும் முதல்வர் ஸ்டாலின், கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றவுள்ளார். சுதந்திர தின விழாவில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
சுதந்திர தினம்: ஆளுநர் தேநீர் விருந்து புறக்கணிப்பு - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
இதையடுத்து, வீரதீரச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, அப்துல் கலாம் விருது, முதல்வரின் காவல் பதக்கம், தகைசால் தமிழர் விருது, முதல்வரின் இளைஞர் விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது, சிறந்த உள்ளாட்சி அமைப்பு உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவிக்கவுள்ளார். இந்த முறை தகைசால் தமிழர் விருது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்துவார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, தலைநகர் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட தலைநகரங்களிலும் சுதந்த தின விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளது. அந்தந்த மாவட்டங்களில் ஆட்சித் தலைவர்கள் கொடியேற்றவுள்ளனர்.