
தமிழகம் முழுவதும் வரி ஏய்பு உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் அவ்வப்போது அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமி வீடு மற்றும் அவரது மகனும் பழனி தொகுதி எம்எல்ஏவுமான செந்தில் குமார், மகள் ஆகியோர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் சிவகாசியில் பிரபல பட்டாசு ஆலைகளில் கடந்த சில நாட்களுக்கு முன் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.
வருமான வரித்துறை சோதனை
இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல தொழில் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிறுவனம் இரும்பு பொருள் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.
வரி ஏய்ப்பு புகார்
இந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள் மற்றும் அலுவலகங்களில் தான் காலை முதலே சோதனையானது நடைபெற்று வருவதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு காலை முதலே சோதனை நடைபெற்று வருவது தலைநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.