
தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளருமான விஜயபாஸ்கர் வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக அதிகமான குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் எழுந்ததை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் 35 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
கிரீன் வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் பங்களா, பூந்தமல்லி நெடுச்சாலையையொட்டி உள்ள அமைச்சரின் சகோதரி வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 6 மணி அளவில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் புகுந்து 100-க்கும் மேற்பட்ட போலீசார் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து ரெய்டு நடந்து வருகிறது.
இந்த சோதனையின் போது விஜயபாஸ்கரின் வீட்டில் இருந்தவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வருமானவரி தொடர்பான விவரங்கள் கேட்டு பெறப்பட்டதையடுத்து நாமக்கல் வரை தற்போது சோதனை நடந்து வருகிறது.