செல்போன் நிறுவனங்களில் இத்தன கோடி முறைகேடா? அதிர்ச்சி தரும் வருமான வரித்துறை!!

By Narendran SFirst Published Jan 1, 2022, 3:32 PM IST
Highlights

செல்போன் மற்றும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், 12,292 கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செல்போன் மற்றும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், 12,292 கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வெளிநாட்டு நிறுவனங்கள் கட்டுப்பாட்டிலுள்ள செல்போன் மற்றும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், அந்நிறுவன உரிமையாளர்களின் வீடு மற்றும் அவர்களின் தொடர்புடைய இடங்களில் கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வந்தனர். பல்வேறு வகையிலான வரி ஏய்ப்பு இந்நிறுவனங்கள் மூலம் நடைபெற்றுள்ளதாக கிடைக்கப்பெற்ற புகார்களின் அடிப்படையில் இந்த சோதனையானது நடை பெறுவதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக கர்நாடகா, தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்கம், ஆந்திர பிரதேஷ், மத்திய பிரதேஷ், குஜராத், மகாராஷ்டிரா, பீகார், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் இந்த சோதனையானது நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த சோதனையில் Xiaomi மற்றும் Oppo அகிய இரு பெரிய நிறுவனங்கள் வெளிநாட்டில் உள்ள தங்கள் குழும நிறுவனங்களுக்கு ராயல்டி அடிப்படையில் 5,500 கோடி ரூபாய்க்கு மேல் முறையான ஆவணங்கள் இல்லமல் பணத்தை அனுப்பி உள்ளது வருமான வரித்துறையினர் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்நிறுவனங்கள் செல்போன் உதிரி பாகங்களை வாங்கி செல்போன் தயாரிப்பதாக கூறிக்கொண்டு அதற்குண்டான வருமானவரி சட்டத்தை முறையாக பின்பற்றாமலும், சரியான வரியை செலுத்தாமலும் சுமார் 1000 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேட்டில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வெளிநாட்டுகளில் இருந்து இந்தியாவில் உள்ள அதன் குழும நிறுவனங்களுக்கு 5,000 கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை கடனாகப் பெற்று அதற்குண்டான உரிய ஆவணங்களை பராமரிக்காமல் இருந்து வந்ததும் சோதனையில் தெரியவந்துள்ளதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து இந்தியாவிலுள்ள அதன் தொடர்புடைய குழும நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் மற்றும் அதற்கான வட்டி தொகைக்கு, முறையான வரி செலுத்தாமல் சுமார் 1,400 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனமும் சுமார் 300 கோடி ரூபாய் அளவிற்கு TDS வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்தது சோதனையில் அம்பலமாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் பெயரளவில் மட்டுமே நிறுவனங்களை துவங்கி அதன் இயக்குனர்களாக இந்தியர்களை பணியமர்த்தி ஒட்டுமொத்த கட்டுப்பாட்டையும் வெளிநாட்டிலிருந்து Xiaomi மற்றும் Oppo போன்ற இந்நிறுவனங்கள் இயக்கி வருவதாகவும் இதுபோன்ற நிறுவனங்களை உருவாக்கி சுமார் 42 கோடி ரூபாய் அளவிற்கு இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு முறையான வரி செலுத்தாமல் உதிரிபாகங்களை அனுப்பியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனை தொடர்பாக தமிழகத்திலும் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில் தமிழகத்தில் உள்ள தங்களுக்குத் தொடர்பே இல்லாத மென்பொருள் போன்ற நிறுவனங்களுக்கு சுமார் 50 கோடி ரூபாய் அளவிற்கு நிதி அனுப்பியது போல் பொய்யாக கணக்கு காட்டி இருப்பதும் விசாரணையில் அம்பலமாகி உள்ளதாகவும், இச்சோதனையின் மூலம் இந்நிறுவனங்கள் வரி ஏய்ப்பு மூலமாகவும் போய் கணக்குகள் மூலமாகவும் முறையற்ற பணப்பரிவர்த்தனை மூலமாகவும் 12,292 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் வருமான வரித்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!