
பிரதமரின் பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் மரவள்ளி மற்றும் கரும்பு பயிர்களைச் சேர்ப்பதற்கு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று தர்மபுரி ஆட்சியர் விவேகானந்தன் தெரிவித்தார்.
தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் விவேகானந்தன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், சிப்காட் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, உதவி கலெக்டர்கள் ராமமூர்த்தி, கவிதா, வேளாண்மை இணை இயக்குனர் சுப்பிரமணியம், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுசீலா, ஆவின் மாவட்ட மேலாளர் செல்வகுமார் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள், விவசாயிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.77 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் விவேகானந்தன் வழங்கினார். பின்னர் விவசாயிகளுக்கான கருத்து கண்காட்சியை திறந்து வைத்து அவர் பார்வையிட்டார்.
அப்போது ஆட்சியர் விவேகானந்தன் பேசியது:
“தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் வழங்குவது தொடர்பாக வேளாண்மை உதவி இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.12 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.12 கோடி பயிர்க்கடன் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வன விலங்குகளால் பயிர் சேதம் ஏற்பட்டால் வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பயிர் இழப்பீட்டு தொகையை கணக்கிட வேண்டும்.
தற்போது வறட்சி காலம் என்பதால் வனத்துறையின் மூலம் காப்புக்காடுகளில் சோலார் மோட்டார் வைத்து வன விலங்குகளுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதமரின் பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் மரவள்ளி மற்றும் கரும்பு பயிர்களைச் சேர்ப்பதற்கு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்” என்று அவர் பேசினார்.