
தர்மபுரியில், போதை போதாததால் சாராயத்தில் ரசாயன பொடி கலந்து குடித்த நண்பர்கள் நால்வரில், மூவர் உயிரிழந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் ஏர்கொல்பட்டியைச் சேர்ந்தவர் பச்சியப்பன் (26). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ஏரியூரைச் சேர்ந்த பொக்லைன் ஓட்டுநர் விஜய் (22). இதே பகுதியை சேர்ந்தவர்கள் உத்திரகுமார் (23), பழனிசாமி (25).
நண்பர்களான இவர்கள் நால்வரும் பெல்லூர் ஏரிக் கரையில் உட்கார்ந்து சாராயம் குடித்தனர். போதை போதாததால் பச்சியப்பன் வீட்டில் இருந்து எடுத்து வந்த ரசாயன பொடியை சாராயத்தில் கலந்து குடிக்கலாம் என முடிவுசெய்து சாராயத்தில் பொடியை கலந்தனர். நண்பர்கள் நால்வரும் பொடி கலந்த அந்த சாராயத்தை குடித்துவிட்டு தங்கள் வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.
குடிபோதை மயக்கத்தில் நால்வரும் வேலைக்கு செல்லாமல் நேற்று முன்தினம் வீட்டிலேயே படுத்து கிடந்தனர். திடீரென நான்கு பேரும் ரத்த வாந்தி எடுத்ததால் அதிர்ச்சியடைந்த அவர்களின் குடும்பத்தினர் அவர்களை பென்னாகரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். ஆனால் வழியிலேயே பச்சியப்பன் இறந்தார்.
பின்னர் மூன்று பேரும் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி விஜய், உத்திரகுமார் ஆகியோர் இறந்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள பழனிசாமி, கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுளார்.
இறந்த பச்சியப்பனின் உடலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்காமல் உறவினர்கள் எரித்து விட்டனர். இதுபற்றி தகவலறிந்த காவலாளர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஏரியூருக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக ஏரியூர் காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.