
சிறுவாணி அணை பகுதியில் இருக்கும் தண்ணீரை கொண்டு எத்தனை நாட்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியும் என்ற விவரத்தை அறிய தமிழக நகராட்சி நிர்வாகத்துறை ஆணையாளர் ஹர்மந்த் சிங் கோவை சிறுவாணி அணைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் சிறுவாணி அணையில் இருந்து தினமும் 2 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருவது சிறுவாணி அணை. இந்த அணை கடந்த பிப்ரவரி மாதம் வறண்டதால் அணையில் இருந்து நீரேற்று குழாய் மூலம் தண்ணீர் எடுப்பது நிறுத்தப்பட்டது. ஆனால், அணையின் மற்றொரு பகுதியில் இருந்த தண்ணீரை மோட்டார்கள் மூலம் அணையின் நீரேற்று குழாய் மூலம் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கேரள அரசின் அனுமதியின்பேரில் கடந்த பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதி முதல் சிறுவாணி அணையில் இருந்து மோட்டார்கள் மூலம் தண்ணீர் நீரேற்றம் செய்து கோவை நகருக்கு விநியோகிக்கப்பட்டது. அதன்படி தினமும் ஒரு கோடி லிட்டர் முதல் 1½ கோடி லிட்டர் வரை தண்ணீர் எடுக்கப்பட்டது. ஆனால் அந்தத் தண்ணீரும் போதுமானதாக இல்லை.
இந்த நிலையில் கடந்த சில நாள்களாக தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியதால் ஒரே நாளில் 5½ அடி தண்ணீர் உயர்ந்தது. அணைக்கு நீர் வரும் அருவிகளில் தண்ணீர் வரத் தொடங்கியதால் நீர்வரத்து அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 27-ஆம் தேதி காலை முதல் மோட்டார் மூலம் நீரேற்றம் செய்வது நிறுத்தப்பட்டு அணையின் நீரேற்று குழாய் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை தண்ணீர் எடுக்க பயன்படுத்தப்பட்டு வந்த மோட்டார்கள் இயக்காமல் அணையின் ஒரு பகுதியில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 27-ஆம் தேதி முதல் தினமும் 1½ கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது. நேற்று முன்தினமும், நேற்றும் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்தது.
சிறுவாணி அணையில் கடந்த சில நாள்களாக மழை பெய்த போதிலும் மொத்தம் உள்ள நான்கு நீரேற்று குழாயில் கடைசி குழாய் மட்டும் தண்ணீரில் மூழ்கியது. மற்ற மூன்று குழாய்களும் வெளியே தெரிகின்றன. அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்தால்தான் மற்ற மூன்று நீரேற்று குழாய்களும் தண்ணீரில் மூழ்கும்.
சிறுவாணி அணையில் நேற்று காலை மூன்று மி.மீட்டரும், அடிவாரத்தில் ஒரு மி.மீட்டரும் மழை பெய்துள்ளது. அணையில் இருந்து நேற்று முதல் இரண்டு கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.
இந்த நிலையில் சிறுவாணி அணை பகுதியில் பெய்துள்ள மழை எவ்வளவு? இருக்கும் தண்ணீரை கொண்டு எத்தனை நாட்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியும்? போன்ற விவரங்களை அறிய தமிழக நகராட்சி நிர்வாகத்துறை ஆணையாளர் ஹர்மந்த் சிங் நேற்று காலை கோவை வந்து சிறுவாணி அணைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவருடன் கோவை மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் மதியழகன், ஆலோசகர் சம்பத் குமார் உள்பட அதிகாரிகள் பலர் உடன் சென்றிருந்தனர்.