
உள்ளாட்சித் தேர்தலையொட்டி அரியலூரில் வாக்காளர் பட்டியல் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் (பொ) சே.தனசேகரன் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், “உள்ளாட்சித் தேர்தலையொட்டி, அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் நேற்று முதல் வாக்காளர் பட்டியல் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதில் தங்கள் பெயர் உள்ளதா? என வாக்காளர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம். இந்த வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்ப்பதற்கான விண்ணப்பமோ, அல்லது பதியப்பட்டுள்ள ஒரு பெயருக்கோ அல்லது பட்டியலில் கண்ட விவரத்திற்கோ மறுப்பு கூற விரும்புவோர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய குறிப்பிடப்படும் இறுதி நாள்வரை தங்களது கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகளை சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் தெரிவிக்கலாம்.
கோரிக்கை மற்றும் மறுப்புரைகளின் மேல் சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்காளர் பதிவு அதிகாரியால் சேர்க்கவோ, நீக்கவோ, திருத்தவோ செய்யும் ஆணைகளின் அடிப்படையில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் ஊரக மற்றும் நகர்புற வாக்குப்பதிவு அலுவலர்களால் முறையாக மேற்கொள்ளப்படும்” என்று அவர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தார்.