
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்குமா ? அவசர வழக்காக ஏற்று உச்சநீதிமன்றம் வரும் 4-ம் தேதி விசாரணை…
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு கடந்த ஆண்டைப் போல விலக்கு அளிக்கக் கோரி, தொடரப்பட்ட பொதுநல வழக்கை அவசர வழக்காக ஏற்றுக் கொண்டுள்ள உச்சநீதிமன்றம், வரும் 4-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு இந்த ஆண்டும் விலக்கு அளிக்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க வேண்டும் என நீதிபதிகளிடம் முறையிடப்பட்டது.
தமிழகத்தில் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். எனவே, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு ஏற்கெனவே, கடிதம் எழுதியிருந்தார்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவுடன் அதற்கு நன்றி தெரிவித்தும் கடிதம் எழுதியிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நிரந்தரமாக நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் பிரதமரிடம் வலியுறுத்தியிருந்தார் எனவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் சாப்ரே மற்றும் எஸ்.கே.கவுல் ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்று, வரும் 4-ம் தேதி விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.