
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு, டாக்டர் எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் எடப்படி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். ஏழை - எளிய விவசாயிகளுக்காகத்தான் அதிமுக . அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விரும்பியபடி எம்.ஜி.ஆர். மிகவும் நேசித்த மதுரை மாநகருக்கென சிறப்பு தனி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இந்த திட்டம் சுமார் 156 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பெரியார் அணை லோயர் கேம்ப் பகுதியிலிருந்து பெரிய ராட்சத குழாய்கள் மூலம் சுமார் 17 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும் என்றார்.
மதுரை, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்ட வேண்டும் என்று பொது மக்கள் அனைவரும் விடுத்த கோரிக்கையினை அரசு உடனடியாக ஏற்றுக் கொள்வதாக கூறினார்.
எம்.ஜி.ஆர் மக்கள் தலைவராக தமிழகத்தின் முதலமைச்சராக 40 ஆண்டுகளுக்கு முன் பதவியேற்ற இதே நன்னாளில் மதுரை, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்படுகிறது என எடப்பாடி பழனிசாமி கூறினார்.