
அரியலூரில் நடந்த சல்லிக்கட்டில் 300 காளைகள், 150 வீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற வீரர் மற்றும் காளைகளுக்கு வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ளது மேலகருப்பூர் கிராமம். இங்கு நேற்று சல்லிக்கட்டு நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடுத்தெருவில் அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலிருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இதில், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 300 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க 150 வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
காளைகள் முட்டி தூக்கிவீசப்பட்டதில் 20 பேர் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த கருவிடைச்சேரி நல்லன்குட்டி. தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், மேலப்பழுவூர் அசோக்குமார் அரியலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கும் மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், லேசான காயமடைந்த குலமாணிக்கம் சரவணன், கோவிலூர் ராஜசேகர், மலத்தான்குளம் பச்சமுத்து உள்ளிட்டவர்கள் கீழப்பழுவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைப் பெற்றனர்.
சல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி நாணயம், சேர், கட்டில், வேட்டி–சேலை, சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
சல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை ஏற்பாடுகளை விழா கமிட்டியினர், கிராம நாட்டாமைகள் செய்திருந்தனர்.