எம்.ஜி.ஆர் சிலை பெயர்த்து வீசப்பட்ட சம்பவம்..சிசிடிவியில் சிக்கிய நபர்.. தஞ்சையில் பதற்றம்..

By Thanalakshmi VFirst Published Jan 26, 2022, 4:22 PM IST
Highlights

தஞ்சாவூரில் எம்ஜிஆர் சிலையை பீடத்தில் இருந்து பெயர்த்தெடுத்து கீழே போட்டுவிட்டுச் சென்ற போதை நபரை போலீஸார் கைது செய்தனர்.
 

தஞ்சாவூர் வடக்கு வீதியில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 2.5 அடி உயரம் உள்ள மார்பளவு சிமென்ட் சிலை, 3 அடி உயரம் உள்ள பீடத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் எம்.ஜி.ஆர். சிலையை பெயர்த்து பீடத்தின் பின்புறம் வீசப்பட்டு கிடந்தது. நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் எம்.ஜி.ஆர். சிலை பெயர்த்து பீடம் பின்புறம் தனியாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்த அதிமுகவினர் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து சிலையை மீட்டு மீண்டும் பீடத்தில் வைத்து சீரமைத்தனர்.

இதனிடையே அதிமுக கரந்தைப் பகுதிச் செயலாளர் அறிவுடைநம்பி, கோட்டை பகுதிச் செயலாளர் புண்ணியமூர்த்தி, 8-வது வார்டுச் செயலாளர் சங்கர் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் அங்கு திரண்டனர். இதுகுறித்து அதிமுகவினர் அளித்த புகாரின்பேரில், தஞ்சை மேற்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது எம்ஜிஆர் சிலை அருகே இருந்த கடை ஒன்றில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில் ஒரு நபர், சிலையைப் பெயர்த்தெடுத்து, அருகில் உள்ள ஒரு கடையின் முன் வீசிச் சென்றது தெரியவந்தது.

விசாரணையில், அந்த நபர், தஞ்சாவூர் வடக்குவாசல் கல்லறை மேட்டுத் தெருவைச் சேர்ந்த மரப்பட்டறை கூலித் தொழிலாளி செல்வராஜ் மகன் சேகர் என்கிற அந்தோனி (40) என்பதும், மதுபோதையில் இந்தச் செயலில் அவர் ஈடுபட்டதும் தெரியவந்தது.இதையடுத்து, போலீஸார் அந்தோனியை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!