
சிவகங்கையில், கிறித்துவர்கள் மற்றும் இந்துக்கள் இணைந்து கொண்டாடிய சமத்துவப் பொங்கலில், காவலாளர்களை திசை திருப்பிவிட்டு மஞ்சுவிரட்டி நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ளது கண்டுப்பட்டி கிராமம். இங்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு, இங்குள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் கிறித்தவர்கள், இந்துகள் இணைந்து கொண்டாடும் சமத்துவ பொங்கல் விழா நடைபெறும். இந்த விழாவையொட்டி இங்குள்ள மக்கள் வீடுகளில் உணவு சமைத்து, வெளியூரை சேர்ந்தவர்களுக்கு விருந்து படைப்பர்.
மேலும் இதனையொட்டி மஞ்சுவிரட்டு போட்டியும் நடைபெறும். ஆனால் உச்ச நீதிமன்றம் விதித்த தடை காரணமாக 2 ஆண்டுகளாக மஞ்சுவிரட்டு நடைபெறவில்லை.
இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான சமத்துவ பொங்கல் விழா கண்டுப்பட்டியில் புனித அந்தோணியார் ஆலயத்தில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. பங்கு தந்தையர்கள் மரியடெலஸ், ஆனந்த் ஆகியோர் சிறப்பு திருப்பலி வழங்கினர்.
இதனையடுத்து கோவில் முன்பு மக்கள் சமத்துவ பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் தங்கள் வழக்கப்படி வெளியூரில் இருந்து வந்தவர்களுக்கு விருந்து படைத்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மஞ்சுவிரட்டு தடையை மீறி நடைபெறலாம் என்பதால், கண்டுப்பட்டியில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையிலான காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ தலைமையில் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் அதிகாரிகளும் இருந்தனர்.
இருப்பினும் பொங்கல் விழா முடிந்ததும், தங்கள் பாரம்பரிய முறைப்படி மஞ்சுவிரட்டு காளைகளை அப்பகுதியை சேர்ந்தவர்கள் அழைத்து வந்தனர்.
பின்னர் காவலாளர்களின் கண்காணிப்பை திசை திருப்பிவிட்டு, மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள், இளைஞர்கள் கண்டுப்பட்டியில் உள்ள கண்மாய் பகுதியில் காளைகளை அவிழ்த்துவிட்டனர்.
அப்போது சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் விரட்டி பிடித்து பொங்கலைக் கொண்டாடினர். இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
மஞ்சுவிரட்டு நடப்பது குறித்த தகவலறிந்து காவலாளர்கள் கண்டுப்பட்டி கண்மாய் பகுதிக்கு விரைந்தனர். அங்கு துணை காவல் கண்காணிப்பாளர் மங்களேசுவரன் மற்றும் காளையார்கோவில் காவலாளர்கள் மாடுபிடி வீரர்களை எச்சரித்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து மஞ்சுவிரட்டு நடத்தினர்.
இதனால் காவலாளர்கள் மஞ்சுவிரட்டு நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தி கலைந்து போக செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது.