கொரோனா பாதிப்பு மீண்டும் இந்தியாவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 3016 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதிகரிக்கும் கொரோனா
கொரோனா பாதிப்பால் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக பரிதவித்து வந்தனர். கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு தற்போது தான் மீண்டும் இயல்பு வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். இந்தநிலையில் மீண்டும், மீண்டும் புது வகையான கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது பொதுமக்களை அச்சம் அடையவைத்துள்ளது. நாடு முழுவதும் 50க்கும் கீழ் குறைந்து இருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று 2151 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3016 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவனையில் 13 ஆயிரத்து 550 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிப்பு சதவிகிதம் 2.73% ஆக உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த 4 நாட்களாக 100ஐ கடந்துள்ளது. வெளிநாட்டில் இருந்த வந்த இருவர் உட்பட மொத்தம் 112பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது 689 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக மருத்துவமனையில் படுக்கை வசதிகள் ஆக்ஸிஜன் வசதிகள் போன்றவற்றை தயார் நிலையில் வைக்கும்மாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்டவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மத்திய அரசு மாநில அரசோடு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.