
ஈரோடு
உயர் அழுத்த மின்சாரத்தை கர்நாடாக மாநிலத்திற்கு கொண்டு செல்வதற்காக பெருந்துறை விவசாய நிலத்தில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ராசி பாளையத்தில் இருந்து உயர் அழுத்த மின்சாரம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை, சென்னிமலை ஒன்றியத்திற்கு உள்பட்ட கிராமங்கள் மற்றும் தர்மபுரி மாவட்டம் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு கொண்டுச் செல்லப்படுகிறது.
இதற்காக ராசி பாளையத்தில் இருந்து உயர் அழுத்த மின் பாதை அமைக்கப்படுகிறது. இந்த மின்பாதை பெருந்துறை மற்றும் சென்னிமலை ஒன்றியத்திற்கு உள்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக செல்கிறது.
உயர் அழுத்த மின்பாதைக்காக விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே “உயர் அழுத்த மின்பாதையில் விவசாயிகள் கட்டிடம் கட்டவோ, மரங்கள் வளர்க்கவோ அனுமதி கிடையாது” என மின்சார வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கப்படுவதால் அந்த இடத்தில் விவசாயிகள் பயிர் செய்ய முடியாத நிலையும் ஏற்படுகிறது.
எனவே, விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைக்க பெருந்துறை மற்றும் சென்னிமலை பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பெருந்துறை மற்றும் சென்னிமலை பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே விவசாயிகள் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்திற்கு சென்னிமலை ஒன்றியக்குழு முன்னாள் கவுன்சிலர் பொன்னுச்சாமி தலைமை வகித்தார்.
முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் சிவசுப்பிரமணி, முத்து விஸ்வநாதன், துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த உண்ணாவிரதத்தை முன்னாள் எம்.எல்.ஏ. நல்லப்பன் தொடங்கி வைத்துப் பேசினார்.
இதில், பெருந்துறை மற்றும் சென்னிமலை பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் உள்பட பெண்கள் பலர் பங்கேற்றனர்.