
ஈரோடு
ஈரோட்டில் பத்து ஏக்கர் தோப்பில், காய்ந்த சருகுகளில் ஏற்பட்ட சிறு தீ மளமளவென பரவியதால் தென்னை மற்றும் பாக்கு மரங்கள் என மொத்த தோப்பும் எரிந்து நாசமானது.
ஈரோடு, அறச்சலூர் அருகே ஜெயராமபுரத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணகுமார். இவருக்குச் சொந்தமான பத்து ஏக்கர் பரப்பளவிலான தோப்பு அறச்சலூர் அருகே உள்ள நாச்சிவலசு பகுதியில் இருக்கிறது. இந்தத் தோப்பில் ஏராளமான தென்னை, பாக்கு மற்றும் கோகோ மரங்கள் இருக்கின்றன.
தற்போது, அறச்சலூர் பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால், தோப்பில் உள்ள ஏராளமான தென்னை, பாக்கு மற்றும் கோகோ மரங்கள் தண்ணீரின்றி பட்டுப்போய் உள்ளன.
மேலும், தோப்பில் இருந்த புல் பூண்டுகள், செடி, கொடிகளும் காய்ந்து கிடக்கின்றன.
இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் இரண்டு மணியளவில் தோப்பில் இருக்கும் காய்ந்த சருகுகளில் இருந்து கரும்புகை வந்தது.
இதனைத் தொடர்ந்து தீ மளமளவென எரியத் தொடங்கி உள்ளது. இதில் தோப்பில் இருக்கும் பட்டுப்போன தென்னை மரங்களிலும் தீ சட்டென்று பரவியது. மேலும், தோப்பு முழுவதும் காய்ந்த சருகுகள் அதிக அளவில் இருப்பதால் தீ வேகமாக பரவியது. இதனால் ஏற்பட்ட கரும்புகையால் அறச்சலூர் பகுதியே மூடியது.
இதுகுறித்து தகவலறிந்ததும் மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி தீயணைப்பு நிலையங்களில் இருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
எவ்வளவு முயற்சித்தும் தீ கட்டுக்குள் வராததால் தொடர்ந்து இரவிலும் தீயை அணைக்கும் பணி தொடர்ந்தது.
இந்த தீ விபத்தில் பத்து ஏக்கர் பரப்பளவில் உள்ள தென்னை, பாக்கு, கோகோ மரங்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.
இதனால், விவசாயி கிருஷ்ணகுமார் மிகவும் வேதனை அடைந்தார்.
பத்து ஏக்கர் தோப்பில் தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.