
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் சாராயக் கடை அமைப்பதை எதிர்த்து 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த சாலையே ரனகளமாக காட்சியளித்தது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்தின் நெடுஞ்சாலையில் இருந்த சாராயக் கடைகள் அகற்றப்பட்டன. திண்டுக்கல் மாவட்டத்தில் கோவிலூர் செல்லும் சாலையில் ஓடைப்பட்டி பிரிவு பகுதியில் இயங்கி வந்த சாராயக்கடை மூடப்பட்டது.
அந்தக் கடையை பெருமாள் கோவில்பட்டி பகுதிக்கு இடமாற்றம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர். இதற்காக ஒருவர் தனது இடத்தை கொடுத்து இருக்கிறார். அங்கு சாராய சரக்குகள் அனைத்தும் கொண்டுவரப்பட்டன.
இதற்கு ஓடைப்பட்டி, பெருமாள் கோவில்பட்டி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, எதிர்ப்புத் தெரிவித்த கூட்டத்தில் இருந்த சிறுவன் ஒருவனை, சரக்குகள் கொண்டுவந்து இறக்கிய சிலர் தாக்கியுள்ளனர்.
இந்த நிலையில், “சிறுவனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாராயக் கடையை தங்கள் பகுதிக்கு கொண்டுவரக் கூடாது” என வலியுறுத்தி இரண்டு கிராம மக்களும் திண்டுக்கல் – கோவிலூர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.
சுமார் 200 பேர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதால், அந்த சாலையே ரனகளமாக காட்சியளித்தது.
இதுகுறித்து தகவலறிந்த தாடிக்கொம்பு காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, “தங்கள் பகுதியில் சாராயக் கடை அமைக்கக் கூடாது. அப்படி அமைத்தால் குடி வெறியில் பெண்களை பலரும் கேலி செய்வார்கள். பள்ளி மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, மாவட்ட நிர்வாகம் சாராயக் கடை கொண்டுவரும் முடிவை கைவிட வேண்டும்” என காவலாளர்கள், மக்கள் அழுத்தமாகத் தெரிவித்தனர்.
இந்த கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுச் செல்வதாக காவலாளர்கள் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து மக்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துச் சென்றனர்.