
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் இருக்கும் 13 குளங்கள் முற்றிலும் வறண்டுபோய் ஒரு சொட்டுத் தண்ணீருக்குக் கூட வழியில்லாமல், கழிவுநீர் மற்றும் குப்பைகளால் நிரம்பி கிடக்கின்றன.
மழை வெள்ளத்தை தேக்கி வைக்க குளங்கள், அணைகளை கட்டி, வெள்ளத்தை கொண்டுவர கால்வாய், ஆறுகள் உருவாக்கப்பட்டது. இந்த நீர்நிலைகள் அனைத்தும் குடிநீர், விவசாயம் உள்பட அனைத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்கியது.
நீர்நிலைகளை முறையாக பராமரித்து மழைநீரை சேமித்து வைக்க வேண்டும். அதன்மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மழை பெய்யாமல் நீர்நிலைகள் வறண்டாலும், ஆழ்துளை கிணறுகள் மூலம் நிலத்தடி நீரை எடுத்து நாம் பயன்படுத்தலாம்.
இதற்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் கோடைகாலத்தில் குளங்கள், அணைகளை தூர்வாரி தயாராக வைக்க வேண்டும்.
முக்கியமாக தண்ணீர் வரும் கால்வாய்களை முறையாக தூர்வாரி முறையாக பராமரிக்க வேண்டும். அதன்மூலம் மழைநீர் வீணாகாமல் சேமிக்கலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 2 ஆயிரம் குளங்கள் மற்றும் நீர்தேக்கங்கள், அணைகள் உள்ளன. இவற்றில் பல குளங்களை தூர்வாரி பல ஆண்டுகள் ஆகின்றன. மேலும், குளங்களுக்கு மழைநீர் வரும் பெரும்பாலான வரத்து கால்வாய்கள் மறைந்து போய்விட்டன. தற்போது பயன்பாட்டில் இருக்கும் வரத்து கால்வாய்களும் கரைகள் சேதமாகி காணப்படுகின்றன.
கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை தூர்வாரும் பணி நடக்கிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்திலும் குளங்கள், கால்வாய்களை தூர்வாரும் பணி நடைபெறுகிறது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஆனால், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து குளங்கள், அணைகளையும் தூர்வாரப்படவில்லை என்பது உண்மை. திண்டுக்கல் நகரில் உள்ள குளங்களுக்கும் இதே நிலைமை தான்.
திண்டுக்கல் நகர் மற்றும் நகரை சுற்றிலும் 13 குளங்கள் உள்ளன. இந்த குளங்களின் இன்றைய நிலைமையோ மிகவும் பரிதாபம்.
அவற்றில் கோட்டைக்குளம், கோபாலசமுத்திரக்குளம், நத்தம் சாலை குளம், சிலுவத்தூர் சாலை குளம் ஆகியவை தூர்வாரப்பட்டு மழைநீரை சேமிக்க தயாராக இருக்கின்றன.
ஆனால், அரண்மனைகுளம், அய்யன்குளம், சாமியார்தோட்டம் குளம், மருதானிக்குளம், வத்தலக்குண்டு சாலையில் உள்ள குளம், பாறைக்குளம் போன்றவை கழிவுநீர் மற்றும் குப்பைகளால் நிரம்பி விட்டன.
பத்து ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாததால் ஒருசில குளங்கள் மைதானமாகவே மாறிவிட்டன. அவற்றில் சீமை கருவேல மரங்கள் எந்தவித இடையூறுமின்றி செழிப்பாக வளர்ந்துள்ளன. இதனால் நகரில் எவ்வளவு மழை பெய்தாலும் இந்த குளங்களில் மழைநீர் தேங்குவதில்லை.
மேலும், குளங்களுக்கு தண்ணீர் தந்து வந்த மழைநீர் வடிகால்கள் அனைத்தும் கழிவுநீர் ஓடைகளாகிவிட்டன. இதன் விளைவாக மழைநீர் அனைத்தும் வீணாவது தொடர்கிறது.
எனவே, “பிற பகுதிகளை போன்று நகரில் உள்ள குளங்களையும் தூர்வார வேண்டும் என்பது அனைத்து மக்களின் விருப்பமாக இருக்கிறது.
கோடைகாலம் நிறைவு பெறுவதற்கு சுமார் 2 மாதங்கள் வரை இருக்கின்றன. இந்த காலக்கட்டத்தில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இல்லை. எனவே, அதற்குள் நகரில் இருக்கும் அனைத்து குளங்கள், வரத்து கால்வாய்களை முழுமையாக தூர்வாரி தயார்படுத்த வேண்டும்.
அதன்மூலம் வரும் காலங்களில் மழைநீரை சேமித்தால், மழையில்லாத காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு மிக மோசமான நிலைக்கு செல்லாது. இதற்கு மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்“ என்பது மக்களின் பெரும் எதிர்பார்ப்பு மற்றும் கோரிக்கையாக உள்ளது.