
சென்னை வில்லிவாக்கம் காந்தி தெருவை சேர்ந்தவர் பிரியா. திருநங்கை. இவர் வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். இவரது எதிர் வீட்டில் வசிப்பவர் வடிவுக்கரசி. பிரியா வீட்டில் வளரும் நாய், அங்குள்ள அடிக்கடி வீடுகளில் புகுந்துவிடும். இதனால், அக்கம்பக்கத்தினர், பிரியாவிடம் நாயை கட்டி போடும்படி கூறியுள்ளனர்.
இதேபோல், எதிர் வீட்டில் வசிக்கும் வடிவுக்கரசி வீட்டிலும் நாய் புகுந்துவிடுவதால், அவருக்கும் பிரியாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், பிரியாவின் வளர்க்கும் நாய், நேற்று வடிவுக்கரசி வீட்டில் நுழைந்தது. இதனால், ஆத்திரமடைந்த வடிவுக்கரசு, நாயை அடித்து விரட்டினார். மேலும், வீட்டில் இருந்த பிரியாவை திட்டி அவமானப்படுத்தியதாக தெரிகிறது. இதனால், மனமுடைந்த பிரியா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த பிரச்சனைக்கு பிறகு, பிரியா வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், அவரது வீட்டுக்கு சென்றபோது, அவர் தூக்கில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து வில்லிவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரியாவை தற்கொலைக்கு தூண்டியதாக வடிவுக்கரசியை கைது செய்தனர்.