
திருப்பதியில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை கடத்தி சென்ற தம்பதியினர் நாமக்கல்லியில் போலீசாரிடம் சிக்கினர்.
ஆந்திர மாநிலம், அனந்தப்பூர் மாவட்டம், உருவகொண்டா கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 13 தேதி திருப்பதி கோவிலுக்கு ஏழுமலையான் சுவாமியை தரிசிக்க வந்துள்ளார்.
அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் சுவாமி தரிசனம் செய்தபின், கோயிலுக்கு வெளியே வந்த வெங்கடேஷ் குடும்பத்தினருடன் கோயில் எதிரே உள்ள மண்டபம் அருகே படுத்து உறங்கினார்.
தொடர்ந்து 14 ஆம் தேதி காலை 7 மணி அளவில் கண் விழித்து பார்த்தபோது அருகில் படுத்திருந்த 1 வயது குழந்தை கட்த்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து திருமலையில் உள்ள போலீசில் வெங்கடேஷ் புகார் அளித்தார். இதையடுத்து வெங்கடேஷ் உறங்கி கொண்டிருந்த இடத்தில் இருந்த சி.சி. டி.வி காட்சிகளை போலீசார் சோதனை செய்தனர்.
அதில், குழந்தை சென்னகேசவலுவை ஒருவர் எடுத்து செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது தெரிய வந்தது.
இதை வைத்து ஆந்திர மாநில போலீசார் தமிழக போலீசாரின் உதவியை நாடினர்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் சிங்கராயபுரம் கிராமத்தில் அசோக் - தங்காயி தம்பதியிடம் குழந்தை சென்னகேசவலு இருந்தது தெரியவந்ததையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குழந்தை இல்லாததால் தம்பதிகள் கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து குழந்தையை மீட்ட நாமக்கல் போலீசார் திருப்பதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆந்திர போலீசார் நாமக்கல் விரைந்துள்ளனர்.