
திருவாரூர்
25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாள் போராட்டம் செய்யப்போவதாக அறிவித்த சத்துணவு ஊழியர் சங்கத்தினரின் இரண்டாவது நாள் போராட்டத்தில் 140 பெண்கள் உள்பட 200 பேர் காவலாளர்களால கைது செய்யப்பட்டனர்.
“சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
உதவியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3500 வழங்க வேண்டும்.
உணவு செலவு மானியத்தை உயர்த்திட வேண்டும்.
பணிக்கொடையை ரூ.3 இலட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மூன்று நாட்கள் தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
சொன்னமாதிரியே, செவ்வாய்க்கிழமை தங்களது சாலை மறியல் போராட்டத்தை தொடங்கினர்.
நேற்று இரண்டாவது நாளாக திருவாரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார்.
இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பைரவநாதன், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், சங்க மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தினால் திருவாரூர் - தஞ்சை சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. பிராதான சாலை என்பதால் போக்குவரத்தை கட்டுக்குள் கொண்டுவர மிகவும் சிரமப்பட்டனர் காவலாளர்கள்.
இதனைத் தொடர்ந்து திருவாரூர் நகர காவலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட 140 பெண்கள் உள்பட 200 பேரை கைது செய்தனர்.